+2 மாணவி மைனரா.. அதெப்படி? ஆதாரம் எங்கே? பலாத்கார வழக்கில் போலீஸுக்கு டெல்லி கோர்ட் கிடுக்கிப்பிடி
போக்சோ வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் பிணையில் வெளிவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி: போக்சோ வழக்கில், 12ம் வகுப்பு படிக்கும் மாணவியை சிறுமி என குறிப்பிட்ட காவல்துறையினருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் டெல்லியின் சுல்தான்புரி பகுதியில் 12ம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஒருவரை காணவில்லை என்று பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் ஒரிரு நாட்களுக்குள் மாணவியின் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். ஆனால் மாணவிக்கு திருமணமாகியுள்ளது. இதனையடுத்து அவரை திருமணம் செய்துக்கொண்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மாணவி 12ம் வகுப்பு பயின்று வந்த நிலையில் அவரை கடத்தியதாகவும், பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் போக்சோ பிரிவில் காவல்துறையினர் இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் இருவரின் சம்மதத்துடன்தான் உடலுறவு கொள்ளப்பட்டது, எனவே போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என இளைஞர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை
இது தொடர்பான வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ரஜ்னிஷ் பட்நாகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் போக்சோ வழக்கு எதன் அடிப்படையில் பதியப்பட்டது என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், "மாணவி 12ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். எனவே அவர் மைனராக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையிலேயே போக்சோ வழக்கு பதவி செய்யப்பட்டது" என்று கூறியுள்ளார். இதை கேட்டு ஆட்சேபனை தெரிவித்த நீதிபதி, "நீங்களாக எப்படி ஒரு ஊகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யலாம்?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

யூகம்
மேலும் இதற்கான உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. காவல்துறையினர் தரப்பில் ஆவணங்களை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற நீதிபதி "ஏன் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி ஆஜராகவில்லை? அடுத்த விசாரணைக்கு தவறாமல் ஆஜராக வேண்டும். அதேபால இந்த முறை ஏன் ஆஜராகவில்லை என்று விளக்கம் அளிக்க வேண்டும்" எனவும் உத்தரவிட்டார். சர்வேதேச அளவில் குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது.

போக்சோ
நாடு முழுவதும் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 7,000 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது ஒரு நாளைக்கு 19 குழந்தைகள் போக்சோ குற்றங்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆசிரியர்கள், உறவினர், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் என நெருங்கிய வட்டங்களில்தான் இந்த போக்சோ குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. குழந்தைகளுக்கு ஆபத்தான தொடுதல் எது என்று சொல்லி தருவதைவிட ஆண்களுக்கு குழந்தைகளை அவர்கள் அனுமதியின்றி தொடக்கூடாது என்று கற்றுத்தர வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

தண்டனை
இந்தியாவில் கடந்த 2012ம் ஆண்டு போக்சோ சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்டால் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக போக்சோ சட்டம் பயன்படுத்தப்படும். இச்சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் பிணையில் வெளிவர முடியாது. அதேபோல குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications