நாடு முழுவதும் இன்று முதல் 15-18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
டெல்லி: நாடு முழுவதும் 15-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கி உள்ளது. இதுவரை 8 லட்சம் சிறுவர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்துள்ளனர்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பரவல் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

கொரோனா கால கட்டுப்பாடுகள்
இதனையடுத்து நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா கால கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சிறார்களுக்கு தடுப்பூசி
இந்நிலையில் நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி இன்று முதல் தொடங்கி உள்ளது. இதற்காக இதுவரை 8 லட்சம் சிறுவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். தமிழகத்திலும் இன்று சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்குகின்றன.

யாரெல்லாம் தகுதியானவர்கள்?
2007-ம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் பிறந்த சிறுவர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்கள். பள்ளிகூடங்கள், சுகாதார மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி கடந்த 25-ந் தேதி இரவு வெளியிட்டிருந்தார். முன்களப் பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசிகள் வரும் 10-ந் தேதி முதல் போடப்படுகின்றன.

145.44 கோடி தடுப்பூசிகள்
நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டன. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதனையடுத்து தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் நேற்று காலை 7 மணியுடனான 24 மணி நேரத்தில் 25,75,225 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டன. நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 145.44 கோடியைக் கடந்தது. 1,55,58,060 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டது.

மத்திய அமைச்சர் ஆலோசனை
முன்னதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதார அமைச்சர்கள், முதன்மை செயலர்கள் உள்ளிட்டோருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று கலந்துரையாடினார். அந்தக்கூட்டத்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான பொது சுகாதார முன்னேற்பாடுகள் மற்றும் தேசிய தடுப்பூசி இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து மன்சுக் மாண்டவியா ஆய்வு மேற்கொண்டார். 15-18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசியும், பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள பிரிவினருக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் சமீபத்திய முடிவைச் செயல்படுத்துதல் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் ஏற்பாட்டின்படி இது நடத்தப்பட்டது. மா.சுப்பிரமணியன் (தமிழ்நாடு), என்.கே.தாஸ் (ஒடிசா), டாக்டர் பிரபுராம் சவுத்ரி (ம.பி.), சத்யேந்திர ஜெயின் (டெல்லி), அனில் விஜ் (ஹரியானா), கேசப் மகந்தா( அஸ்ஸாம்) உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications