தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இழக்கும் பொதுமக்கள்.. பரபர சர்வே முடிவுகள்! என்ன காரணம்
டெல்லி: கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை இந்திய மக்களிடையே குறைந்துவிட்டதாக சிஎஸ்டிஎஸ் நடத்திய சர்வே முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் இந்த லோக்சபா தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த லோக்சபா தேர்தல் தொடர்பாக பல்வேறு சர்வேக்கள் நடத்தப்பட்டு, அது குறித்த முடிவுகள் வெளியாகி வருகிறது. இதற்கிடையே சிஎஸ்டிஎஸ் என்ற அமைப்பு நடத்திய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையம்: குறிப்பாக இதில் தேர்தல் ஆணையம் குறித்தும் சில கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. 2019 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில், சுமார் 50% வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் மீது அதிக நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால், இந்த முறை வெறும் 28 சதவீதம் பேர் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் ஓரளவுக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2019 தேர்தலுக்குப் பிறகு சுமார் 27% பேர் ஓரளவுக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறியிருந்த நிலையில், இப்போது 2024இல் அது 30%ஆக அதிகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
நம்பிக்கை இல்லை: தேர்தல் ஆணையத்தின் மீது பெரியளவில் நம்பிக்கை இல்லை என்று கூறுவோரின் விகிதம் 2019இல் 7%ஆக இருந்த நிலையில், இப்போது அது 14%ஆக இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல சுத்தமாக நம்பிக்கையே இல்லை எனக் கூறுவோரின் எண்ணிக்கையும் 5 ஆண்டுகளில் 5%இல் இருந்து 9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
காரணம் என்ன: தேர்தல் ஆணையத்தின் மீது மட்டுமின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதும் வாக்காளர்களுக்குக் கணிசமாகச் சந்தேகம் இருக்கவே செய்கிறது என்பது இந்த சர்வேயில் தெரிய வந்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆளும் தரப்புக்குச் சாதமாக மாற்ற அதிக வாய்ப்பு இருப்பதாக 17 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
இதற்கு ஓரளவுக்கு வாய்ப்பு இருப்பதாக 28 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். 27 சதவீதம் பேர் மட்டுமே வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர். மற்றவர்கள் எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை.
விசாரணை அமைப்புகள்: இதில் மத்திய பாஜக அரசு விசாரணை ஏஜென்சிக்களை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதாக நினைக்கிறீர்களா என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. இதற்கு மக்களின் பதில் இரு வேறாக இருந்துள்ளது. அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அமைப்பை அரசியல் பழிவாங்கல்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாக 35% பேர் கூறியுள்ளனர். அதேநேரம் 31% பேர் விசாரணை அமைப்புகள் சட்டப்படியே செயல்படுவதாகக் கூறியுள்ளனர். மீதமுள்ளவர்கள் பதில் அளிக்கவில்லை.
லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் இணைந்து நடத்திய இந்த சர்வே நாடு முழுக்க உள்ள 100 நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள 100 சட்டமன்றத் தொகுதிகளில் நடத்தப்பட்டதாகும்.
ஒன் இந்தியா தளத்தில் இது தொடர்பாக வெளியாகியுள்ள பிற செய்திகள்:
மோடிக்கு சாதகமாக இருக்கும் அந்த 2 மேட்டர்!பரபர சர்வே
என்ன தான் விலைவாசி உயர்வும், வேலையின்மையும் முக்கிய பிரச்சினைகளாக இருந்தாலும் கூட ராமர் கோயில் மற்றும் உலக அரங்கில் மோடியின் இமேஜ் ஆகியவை பாஜகவுக்கு பெரியளவில் சாதகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
"பொது சிவில் சட்டம்.." இஸ்லாமியர்களின் ஆதரவும் இருக்கு!
நமது நாட்டில் சிவில் விவகாரங்களுக்கு இப்போது ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு சட்டம் இருக்கிறது. அதற்கு பதிலாக அனைத்து மதங்களுக்கும் ஒரே சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று பாஜக சொல்லி வரும் நிலையில், இதற்கு இஸ்லாமியர்களிடையே கொஞ்சம் ஆதரவு இருப்பதாக சிஎஸ்டிஎஸ் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு தேர்தலில் எது நெருக்கடியாக இருக்கும்!
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், இந்த முறை பாஜகவுக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே மோதல் இருக்கிறது. இதற்கிடையே பாஜகவுக்கு இந்த முறை எது மிக பெரிய பிரச்சினையாக இருக்கும் என்பது குறித்து சிஎஸ்டிஎஸ் சர்வேயில் சில முக்கிய கருத்துகள் கூறப்பட்டுள்ளது..












Click it and Unblock the Notifications