ஒரே நாளில் கொத்து கொத்தாக கொரோனாவிற்கு மரணம் - பலி எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்ன
உலகம் முழுவதும் ஒரே நாளில் 14,091 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் 6148 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பீகாரில் 3,971 பேர் ஒரே நாளில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள
டெல்லி: உலகம் முழுவதும் கொத்து கொத்தாக கொரோனாவிற்கு உயிரிழந்து வருகின்றனர். ஒரே நாளில் 14,091 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் 6148 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 175,163,484 பேராக அதிகரித்துள்ளது. 37,76,663 பேர் உலகம் முழுவதும் மரணமடைந்துள்ளனர். கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையில்தான் அதிக மரணங்கள் இந்தியாவில் பதிவாகி வருகின்றன.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 613,494 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ஒருநாள் மரண எண்ணிக்கை 452 பேராக உள்ளது. அதே போல பிரேசில் நாட்டில் 2,484பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். அங்கு கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 479,791 பேராக உயர்ந்துள்ளது. இதே போல ரஷ்யா, அர்ஜென்டைனா, கொலம்பியா, போலாந்து, மெக்சிக்கோ, பெரு, தென்னாப்பிரிக்கா நாடுகளிலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

உருமாறிய வைரஸ் வகைகள்
கொரோனா வைரஸ் உருமாறி பலவித பெயர்களுடன் உலா வருகிறது. ஆல்பா, பீட்டா,காமா, டெல்டா, கப்பா என பலவிதமாக பரவி வருகிறது. டெல்டா வேரியண்ட் வகைதான் படு பயங்கரமானது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

உயிர் குடிக்கும் வைரஸ்
வைரஸ் பாதிப்பு ஒருபக்கம் இருக்க கருப்பு பூஞ்சையும், வெள்ளை, மஞ்சள் பூஞ்சையும் பரவி மக்களின் உயிரை குடித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6148 பேர் உயிரிழந்துள்ளனர்.

மரணத்திற்கு காரணம் என்ன
கொரோனா முதல் அலையில் தினசரியும் நூற்றுக்கணக்கானோர் மட்டுமே மரணமடைந்தனர்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் தினசரி மரணம் 4ஆயிரம் பேராக அதிகரித்தது. பின்னர் படிப்படியாக குறைந்து வந்தது. நேற்றைய தினம் 2219 பேர் மட்டுமே உயிரிழந்தனர். இன்று ஒரே நாளில் பலி எண்ணிக்கை 6148 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் கொத்து கொத்தாக மரணங்கள் ஏற்படுவதற்குக் காரணம் டெல்டா வேரியண்ட் வகைதான் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. மக்கள் நினைப்பதை விட மிகவும் கொடூரமானது இந்த டெல்டா வைரஸ் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

என்னென்ன பாதிப்பு
இந்தியாவில் டெல்டா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த அறிகுறிகளுடன், காது கேளாமை, தீவிர வயிற்றுக் கோளாறுகள், உறுப்புகள் சிதையும் அளவுக்கான ரத்தம் உறைதல் ஆகிய புதிய விளைவுகளும் தோற்றுவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

அதிகம் பாதிக்கும் டெல்டா
பிரிட்டனில் முதலில் காணப்பட்ட ஆல்பா மரபணு மாற்ற வைரசை விட இந்தியாவில் பரவும் டெல்டா மரபணு மாற்ற வைரஸ் 50 சதவிகிதம் அதிக தொற்றும் திறனுடையது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பீட்டா, காமா ரக மரபணு மாற்ற வைரஸ் தொற்றின் போது இது போன்ற மிகவும் ஆபத்தான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை என நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர்.

பீகாரில் ஒரே நாளில் 3,971 பேர் பலி
இந்தியாவில் கொரோனா மரணம் இதுவரை 6 ஆயிரத்துக்கு மேல் பதிவானதில்லை. கடந்த 24 மணி நேரத்தில் 6148 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம், பீகார் மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை திருத்தம் செய்யப்பட்டது தான். பலி எண்ணிக்கை திருத்தப்பட்டதால் பீகாரில் 3,971 பேர் ஒரே நாளில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் மேல் ஆசையிருந்தால்
கொரோனா பரவலை தடுக்கவும், பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் மக்கள் அதை கண்டு கொள்ளாமல் வெளியில் சுற்றி வருகின்றனர். லேசான தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலே மக்களின் கும்பல் கும்பலாக பொது இடங்களில் குவியத் தொடங்கி விடுகின்றனர். முன்பு இருந்ததை வித தற்போது பரவும் வைரஸ் ஆபத்தானது என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்தாலும் யாரும் கண்டு கொள்வதில்லை. உயிர் மேல் ஆசையிருப்பவர்கள் வீட்டிற்குள் அமைதியாக இருந்தால் மட்டுமே கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்பது சுகாதாரத்துறை ஆய்வாளர்களின் கருத்தாகும்.












Click it and Unblock the Notifications