ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணிஷ் சிசோடியா அதிர்ச்சி தோல்வி! ஜங்புரா தொகுதியில் பாஜக வெற்றி
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன. வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடந்து வரும் சூழலில், இதில் ஜங்புரா தொகுதி பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. அங்கு ஆம் ஆத்மி சார்பில் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும் பாஜக சார்பில் தர்விந்தர் சிங் மர்வா போட்டியிட்டுள்ளனர். அங்கு மணிஷ் சிசோடியாவை வீழ்த்தி பாஜகவின் தர்விந்தர் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வந்தது. கடந்த 9.5 ஆண்டுகளாக அங்கு முதல்வராக கெஜ்ரிவால் இருந்தார். சில மாதங்களுக்கு முன்பே அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகிய சூழலில், அதிஷி முதல்வராகப் பதவியேற்றார்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் ஆம் ஆத்மி களமிறங்குகிறது. மறுபுறம், தலைநகர் டெல்லியில் எப்படியாவது ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக போட்டியிடுகிறது. இதனால் இந்த முறை அங்குப் போட்டி கடுமையாகவே இருந்தது.
டெல்லி தேர்தல்:
டெல்லியைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் 36 தொகுதிகளில் எந்தக் கட்சி வெல்கிறதோ.. அந்தக் கட்சி தான் ஆட்சியைப் பிடிக்கும். ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே போட்டி கடுமையாக உள்ள சூழலில், பல தொகுதிகள் கவனம் பெற்றுள்ளன. அதில் ஒன்று தான் ஜங்புரா தொகுதி.
மணிஷ் சிசோடியா:
ஆம் ஆத்மி மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா கடந்த மூன்று தேர்தல்களில் பட்பர்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்டிருந்தார். ஆனால், இந்த முறை அவர் தொகுதி மாறி இந்த ஜங்புராவில் களமிறங்குகிறார். கடந்த 3 தேர்தல்களாக இங்கு ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளதால் இந்த முறையும் அதே நம்பிக்கையில் ஆம் ஆத்மி உள்ளது.
மறுபுறம் பாஜக சார்பில் போட்டியிடும் தர்விந்தர் சிங் மர்வா உள்ளூரில் செல்வாக்கு பெற்றவர். அவர் 1998ல் தொடங்கி 15 ஆண்டுகள் இதே ஜங்புரா தொகுதியில் எம்எல்ஏவாக இருந்துள்ளார். அப்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த தர்விந்தர் சிங், இப்போது பாஜக சார்பில் களமிறங்குகிறார். இதன் காரணமாகவே அங்குப் போட்டி கடுமையாக இருந்தது.
கடும் போட்டி:
இந்த ஜங்புரா தொகுதியில் கடந்த 2020 சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட பிரவீன் குமார் 55 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தார். பாஜக வேட்பாளர் இம்பிரீத் குமார் 29 ஆயிரம் வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் தர்விந்தர் சிங் 13 ஆயிரம் வாக்குகளையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்த தொகுதியில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி புதன்கிழமை வாக்குப்பதிவு நடந்த சூழலில், இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்தத் தொகுதியின் முதற்கட்ட டிரெண்ட் வெளியானது முதலே மணிஷ் சிசோடியா மற்றும் தர்விந்தர் சிங் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர்.
அங்கு அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மணிஷ் சிசோடியா தோல்வி அடைந்துள்ளார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட தர்விந்தர் சிங் சுமார் 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications