ஜுஸ் கடையை இடித்ததும்.. ஓடி வந்த சிறுவன்.. பட்டென தரையில் அமர்ந்து.. டெல்லியை கலங்கடித்த சம்பவம்!
டெல்லி: டெல்லியில் இன்று ஆக்கிரமிப்பு இடங்கள் என்று கூறி ஜஹாங்கிர்புரி பகுதியில் பல்வேறு கட்டிடங்களை மாநகராட்சி நிர்வாகிகள் இடித்தனர். இதில் சிறுவன் ஒருவனின் ஜுஸ் கடை இடிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கடந்த 4 நாட்களுக்கு முன் டெல்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தியின் போது இந்துக்கள் - இஸ்லாமியர்கள் இடையே மோசமான கலவரம் ஏற்பட்டது. இதை மையமாக வைத்து அங்கு ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.
இன்று காலையில் அங்கு பல்வேறு கடைகள், வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது. இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தற்போது இடைக்கால தடை விதித்து இருக்கிறார்.

டெல்லி
டெல்லியில் கடைகள் இடிக்கப்பட்ட சம்பவம் குறித்த நோட்டீஸ் எதுவும் யாருக்கும் கொடுக்கப்படவில்லை. ஆக்கிரமிப்பு இடங்கள் இடிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் என்ன இடங்கள் இடிக்கப்படும் என்பது குறித்த எந்த தகவலும் மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால் திடீரென வந்து அதிகாரிகள் கடையை இடிக்க தொடங்கியதும், கடையில் இருந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

என்ன நடந்தது
இங்கு கடைகள் வைத்து இருந்தவர்கள் ஒன்றும் பணக்காரர்கள், கோடீஸ்வரர்கள் அல்ல. எல்லாம் தினசரி உணவிற்கே இது போன்ற கடைகளை நம்பி இருப்பவர்கள்தான். எல்லோரும் ஏழைகள். ஒருநாள் காலை 9 மணிக்கு இப்படி திடீரென தங்களின் வாழ்வாதாரம் கண் முன்னே நசுக்கப்பட்டதை கண்டு அவர்கள் எல்லோரும் கலங்கிப்போய் உள்ளனர். பல இடங்களில் மக்கள்.. எங்க பொருட்களை எடுத்துக்குறோம்.. கொஞ்சம் டைம் கொடுங்க என்று கேட்டுள்ளனர்.

ஏழைகள்
ஆனால் பொருட்களை எடுக்க கூட நேரம் கொடுக்காமல் பல இடங்களில் புல்டோசர் உதவியுடன் வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டு உள்ளது.இதே கடைசியில் ஜூஸ் கடை வைத்திருக்கும் நபர் ஒருவரின் கடை இன்று இடிக்கப்பட்டது. கடை இடிக்கப்பட்டது தெரிந்தும் அந்த கடை வைத்து இருந்தவரின் மகன் வேகமாக சம்பவ இடத்திற்கு ஓடி வந்து அங்கேயே அமர்ந்து அழுத காட்சிகள் அங்கு சுற்றி இருந்தவர்களை கலங்க வைத்தது.

சிறுவன்
அதோடு இல்லாமல் அந்த சிறுவன் இடிக்கப்பட்ட தனது அப்பாவின் கடையில் கீழே சிதறிக்கிடக்கும் சில்லறை காசுகளை பொறுக்கிய நிகழ்வு பலரையும் அதிர வைத்தது. கீழே கிடந்த காசுகளை கண்ணீர் விட்டபடி அந்த சிறுவன் எடுத்துக்கொண்டு இருந்தான். அதோடு சிதறிக்கிடந்த ஜுஸ் பாட்டில்களையும் சிறுவன் பொறுக்கி எடுத்துக்கொண்டு இருந்தான். சுற்றி எல்லாம் உடைக்கப்பட்ட நிலையில்.. கான்கிரீட் குப்பைகளுக்கு இடையில் அமர்ந்து அந்த சிறுவன்.. இல்லாத தன் அப்பாவின் கடையில் காசுகளை பொறுக்கிக்கொண்டு இருந்த சம்பவம் அங்கு பலரையும் கலங்க வைத்தது.

புகைப்படம்
இந்த சம்பவம் தற்போது புகைப்படமாக வெளியாகி வைரலாகி உள்ளது. அந்த கடையில் மீதம் இருந்த பொருட்களை அந்த சிறுவன் எடுத்து சென்ற சம்பவம் அங்கு இருந்தவர்களை கலங்க அடித்தது. இன்று ஒருநாள் சம்பவத்தால் அந்த சிறுவனின் குடும்பத்திற்கு 25 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இனி கடை திறக்க முடியாது என்பதால் அவர்களின் குடும்பம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications