டெல்லி தேர்தல்: போட்டி போட்டு 'கட்சி தாவி'களை நம்பி களமிறக்கிய ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ்- பரபர களம்
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் நிலையில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளில் இருந்து கட்சி மாறிய 20 வேட்பாளர்கள் மீதுதான் அனைவரது கவனமும் திரும்பி இருக்கிறது. டெல்லியில் புதிய ஆட்சி அமைவதில் இந்த 'கட்சி தாவிகள்' 20 பேரும் தீர்மானிக்கும் சக்திகளாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
டெல்லி தேர்தல் களத்தில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளுமே கட்சி மாறி வந்த 20 பேரை வேட்பாளர்களாக களத்தில் நிறுத்தி இருக்கின்றன. இப்படி கட்சி மாறிய 20 பேரும் தேர்தலில் வென்று தங்களது செல்வாக்கை நிரூபித்தாக வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். ஏனெனில் கட்சி மாறிய தங்களது அரசியல் எதிர்காலமே இந்த தேர்தல் வெற்றியில்தான் உள்ளது என்பதை உணர்ந்தவர்கள்தான்.

பாஜக 'தலைகளை' அள்ளிய ஆம் ஆத்மி
2020-ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளர்களாக போட்டியிட்ட முக்கிய தலைகள் இந்த முறை ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களாக உருமாறி நிற்கின்றனர்.
பட்டேல்நகர் தொகுதி சுவராசியம்
பட்டேல்நகர் தனித் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக போட்டியிடும் பர்வேஷ் ரத்தன், பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜ்குமார் ஆனந்தை எதிர்த்து களம் காண்கிறார். இதில் வேடிக்கையானது, 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராஜ்குமார் ஆனந்த், ஆம் ஆத்மி வேட்பாளராகவும் பாஜக வேட்பாளராக பர்வேஷ் ரத்தனும் போட்டியிட்டதுதான்.
2020-ம் ஆண்டு தேர்தலில் பட்டேல்நகர் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராகப் போட்டியிட்ட ராஜ்குமார் ஆனந்த் 73,463 வாக்குகளையும் பாஜக வேட்பாளராக களம் கண்ட பர்வேஷ் ரத்தன் 42,528 வாக்குகளையும் பெற்றிருந்தனர். 2020-ல் இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு 3,382 வாக்குகளைப் பெற்றவர் கிருஷ்ண தீரத். இந்த முறை ராஜ்குமார் ஆனந்த், பர்வேஷ் ரத்தன் கட்சி மாறி வேட்பாளர்களாக நிற்கும் நிலையில் கிருஷ்ண தீரத் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக களம் காண்கிறார்.
இதேபோல பாஜகவின் ஜிதேந்தர் சிங் மற்றும் சுரீந்தர் பட்டேல் இருவரும் திடீரென ஆம் ஆத்மியில் இணைந்தனர். ஜிதேந்தர் சிங் ஷாதாரா தொகுதியிலும்
சுரீந்தர் பட்டேல் திமார்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மேலும் பாஜகவின் பிரம் சிங் தன்வார், பிபி தியாகி, அனில் ஜா ஆகியோரும் ஆம் ஆத்மியில் இணைந்து இந்த தேர்தலில் அக்கட்சியில் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். இவர்களில் பிபி தியாகி லக்ஷ்மி நகர், அனில் ஜா கிராரி, பிரம்சிங் தன்வார் சத்ராபூர் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
சத்ராபூர் தொகுதியை பாருங்க..
பட்டேல் நகர் தொகுதியைப் போலவே சத்ராபூர் தொகுதியிலும் விசித்திரம்தான். இத்தொகுதியில் 2020-ம் ஆண்டு ஆம் ஆத்மி வேட்பாளராகப் போட்டியிட்டு 3,720 வாக்குகளில் வென்றவர் கர்தார் சிங் தன்வார். இந்த முறை கர்தார் சிங் தன்வார் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். கடந்த முறை பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட பிரம்சிங் தன்வார் இந்த முறை ஆம் ஆத்மி வேட்பாளராக நிற்கிறார்.
2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கிராரி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் ரிதுராஜ் கோவிந்த், பாஜகவின் அனில் ஜாவை 5,654 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த முறை ரிதுராஜ் கோவிந்துக்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில் அனில் ஜா கட்சி தாவி அதே தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக இம்முறை களம் காண்கிறார்.
இதேபோல காங்கிரஸ் கட்சியில் இருந்து தாவியவர்களையும் ஆம் ஆத்மி வேட்பாளர்களாக களமிறக்கி இருக்கிறது. ஆம் ஆத்மிக்கு தாவிய சில நாட்களிலேயே காங்கிரஸின் வீர் சிங் திங்கம்- சீமாபுரி தொகுதிக்கும் சுமேஷ் சோகீன் மாதியாலா தொகுதிக்கும் சீதாம்பூர் தொகுதிக்கு ஜூபை அகமதும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
ஆம் ஆத்மிக்கு சளைக்காத பாஜக
ஆம் ஆத்மிக்கு தாங்கள் சளைத்த கட்சி அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் பாஜக, டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி, ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் கைலாஷ் கலோட் ஆகியோரை வேட்பாளரகளாக நிறுத்தியுள்ளது. காந்தி நகர் தொகுதியில் அரவிந்த் சிங் லல்வி, பிஜ்வாசன் தொகுதியில் கைலாஷ் கலோட் பாஜக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்,
மேலும் முன்னாள் காங்கிரஸ் தலைவர்களான ராஜ்குமார் சவுகானுக்கு மங்கோல்புரி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் நீரம் பசோயாவுக்கு கஸ்தூர்பா நகர், தர்வீந்தர் மார்வாவுக்கு ஜங்புரா தொகுதிகளை வழங்கி இருக்கிறது பாஜக.
கட்சி மாறிகளுக்கு காங்கிரஸ் தாராளம்
காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மியின் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களான கட்சி தாவிய தரம் பால் லக்ராவுக்கு முன்ட்கா தொகுதி, அப்துல் ரகுமானுக்கு சீலாம்பூர் தொகுதியை கொடுத்திருக்கிறது.
காங்கிரஸில் இணைந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் ராஜேஷ் குப்தா தற்போது கிராரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக களம் காண்கிறார்.
ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான தேவேந்தர் ஷெராவத், ஹாஜி இஸ்ராக் ஆகியோரையும் பிஜ்வாசன், பாபர்பூர் தொகுதிகளில் வேட்பாளரக்ளாக நிறுத்தியுள்ளது காங்கிரஸ்.
தீர்மானிக்கும் சக்திகளா?
இப்படி கட்சி மாறியதால் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் தேர்தலில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களாகவும் நிறுத்தியிருக்கிறது. கட்சி மாறி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட இவர்கள் வென்றால் புதிய ஆட்சி அமைவதில் தீர்மானிக்கும் சக்திகளாகவும் இருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications