கொத்தாக மக்களை கொல்ல திட்டம்.. டெல்லி கார் வெடிப்பில் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தியது ஏன்? பகீர்
டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் கார் வெடித்த வழக்கில் 13 பேர் பலியாகினர். மேலும் 15க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு அம்மோனியம் நைட்ரேட் மற்றும் டெட்டனேட்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வெடிகுண்டுக்கு பதில் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தியது ஏன்? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையத்தில் 1வது நுழைவு வாயிலில் நேற்று மாலை 6.52 மணிக்கு சென்று கொண்டிருந்த ஹூண்டாய் ஐ20 கார் வெடித்து சிதறியது. பயங்கர சத்தத்துடன் வெடித்த காரில் இருந்து தீப்பிழம்பு பலமீட்டர் உயரத்திற்கு வானத்தில் பரவியது. இதில் டூவீலர்கள், கார்கள், மின்சார வாகனம் என்று 13 வாகனங்கள் எரிந்தன.

இந்த கார் வெடிப்பில் 9 பேர் பலியான நிலையில் 20 பேர் காயமடைந்தனர். அதன்பிறகு 4 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லி போலீசாருடன், என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமையும் விசாரணையை தொடங்கி உள்ளது. டெல்லி கோட்வாலி போலீசார் ‛உபா' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதல் நடத்தியவர் உமர்?
இதற்கிடையே, தான் வெடித்து சிதறிய ஹூண்டாய் ஐ20 கார் மற்றும் அதனை ஓட்டி சென்றவர் பற்றி அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் புதியதகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. டெல்லியில் கார் வெடிப்பை நிகழ்த்தியவர் டாக்டர் உமர் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவரது போட்டோ வெளியிடப்பட்டுள்ளது.
இவர் தனது காரில் வெடிப்பொருட்களை நிரப்பி வந்து அதனை வெடிக்க வைத்துள்ளார். அதில் டாக்டர் உமர் பலியாகி உள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். காரில் சிதறி கிடந்த உடலின் டிஎன்ஏவும், டாக்டர் உமரின் குடும்பத்தினரின் டிஎன்ஏவையும் ஒப்பிட்டு பார்த்து இதனை போலீசார் உறுதி செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அம்மோனியம் நைட்ரேட் பயன்பாடு
இது ஒருபுறம் இருக்க கார் வெடிப்புக்கு உமர் டெட்டனேட்டர், அம்மோனியம் நைட்ரேட் எரிபொருள் எண்ணெய் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. செங்கோட்டை என்பது பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். தினமும் மாலையில் ஏராளமானவர்கள் கூடுவார்கள் என்பதால் அந்த இடத்தை நோக்கி வந்து முகமது உமர் தாக்குதல் நடத்தி உள்ளார்.
இந்நிலையில் தான் டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது ஏன்? என்பது பற்றி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. உண்மையில் இந்த கார் வெடிப்புக்கு ANFO எனும் அம்மோனியம் நைட்ரேட் பியூயல் ஆயில் (Ammonium Nitrate), டெட்டனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை கார் வெடிப்பு நடந்த இடத்துக்கு அருகே கிடந்த அம்மோனியம் நைட்ரேட் தடயங்கள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெடிப்பொருளாக பயன்படுத்தலாம்
இந்த அமோனியம் நைட்ரேட்டின் வேதியியல் பெயர் NH4NO3 ஆகும். விவசாய உரங்கள் தயாரிக்க இது பயன்படுத்தப்படுகிறது. நைட்ரஜன் நிறைந்த உரங்களில் அம்மோனியம் நைட்ரேட் அதிகமாக இருக்கும். மேலும் பாறைகள், சுரங்கப்பாதை பணிகளின்போது வெடிப்பொருளாகவும் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்படுகிறது.
இந்த அம்மோனியம் நைட்ரேட் இயல்பில் வெடிக்காது. மாறாக எரிபொருள் எண்ணெய் அல்லது பெட்ரோலியம் சார்ந்த எரிபொருட்களின் கலந்தால் வெடித்து அதிக வெப்பத்தை வெளியேற்றும் தன்மை கொண்டது தான் இந்த அம்மோனியம் நைட்ரேட் 94 சதவீதம் எரிபொருள் எண்ணெய் 6 சதவீதம் என்ற அளவில் மிக்ஸ் செய்து தீப்பிடிக்க வைக்கும்போது அது அதிக வீரியத்துடன் வெடித்து சிதறும்.
செலவு மிகவும் குறைவாகும்
அம்மோனியம் நைட்ரேட் ஆக்ஸிஜனே்ற்றியாவும், எரிபொருள் எண்ணெய் எரியும் பொருளாக மாறுவது தான் இதற்கு காரணம். அந்த வகையில் அம்மோனியம் நைட்ரேட் பியல் எண்ணெய் கலவையில் டெட்டனேரை பயன்படுத்தி வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்பொருட்களை தயாரிக்க செலவு மிகவும் குறைவாக தான் இருக்கும்.
அதேவேளையில் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும். வெடிக்கும்போது அதிகப்படியான வெப்பம் வெளியேறும். கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் போன்ற நச்சுவாயுக்கள் வெளியேறும். மேலும் வினாடிக்கு சுமார் 3,200 மீட்டர் அளவுக்கு வெடிப்பு வேகம் இருக்கும். இது பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தலாம். இதனால் தான் இது ஆபத்தானதாக பார்க்கப்படும்.
ஐஇடி வகை குண்டு தயாரிக்க..
குறைந்த விலையில் இதனை வாங்கி பெரிய அளவில் தாக்குதல் நடத்த முடியும் என்பதால் பயங்கரவாதிகள் தற்போது அம்மோனியம் நைட்ரேட்டை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். குறிப்பாக ஐஇடி வகை குண்டுகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.
நம் நாட்டில் 45 சதவீதத்துக்கு அதிகமாக அம்மோனியம் நைட்ரேட் கலவையை பயன்படுத்தினால் அது வெடிப்பொருள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும் சுரங்கம் மற்றும் கட்டுமானம் போன்ற தொழில்களில் அதன் சட்டப்பூர்வ பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படுகிறது.
கொத்து கொத்தாக மக்கள் பலியான வரலாறு
முன்னதாக கடந்த 2020ல் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் வைக்கப்பட்டு இருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 135 பேர் பலியாகினர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். அதற்கு முன்பாக கடந்த 2015-ம் ஆண்டு சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற விபத்தில் அம்மோனியம் நைட்ரேட் உள்பட வேதிப்பொருள் வெடித்தது. இதில் 173 பேர் பலியாகினர்.
அதேபோல் அமெரிக்காவில் 1947ம் ஆண்டு டெக்ஸாஸ் மாகணத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் அமோனியம் நைட்ரேட் வெடித்தது. இதில் 581 பேர் பலியாகினர். மேலும் 1921ம் ஆண்டில் ஜெர்மனியில் அமோனியம் நைட்ரேட் வெடி பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 500 பேர் பலியாகினர். இப்படி அம்மோனியம் நைட்ரேட் வெடித்தால் பேரழிவை தரும் என்பதாலே டெல்லி கார் வெடிப்புக்கு அது பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications