அத்துமீறிய போலீஸ் அதிகாரி.. உடனே மாற்றுங்கள்! நீதிமன்றத்தில் முறையிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், காவல் உதவி ஆணையர் ஒருவர் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
சமீப நாட்களாக இந்தியா கூட்டணியின் தலைவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நேற்று அவர் டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

முன்னதாக, தன்னுடைய பாதுகாப்புக்காக போடப்பட்டிருக்கும் காவல்துறை அதிகாரியை மாற்ற வேண்டும் என்று கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். அதாவது, காவல் உதவி ஆணையர் ஏ.கே.சிங் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், எனவே, அவரை மாற்ற வேண்டும் என்றும் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
காவல் உதவி ஆணையர் ஏ.கே.சிங் மீது ஏற்கெனவே, டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியிருந்தார். நீதிமன்றத்திற்கு வரும்போது பாதுகாப்பு வளையத்தில் இருந்த காவல்துறை அதிகாரி ஏ.கே.சிங், தனது கழுத்தை பிடித்து இறுக்கியதாக சிசோடியாக கூறியிருந்தார்.
ஆனால், காவல்துறை தரப்பில் இந்த குற்றச்சாட்டு மறுக்கப்பட்டிருந்தது. சிசோடியாவின் பாதுகாப்பு காரணங்களுக்காகவே இவ்வாறு செய்யப்பட்டதாகவும் காவல்துறை விளக்கமளித்திருந்தது. இந்நிலையில் தற்போது இதே குற்றச்சாட்டை அரவிந்த் கெஜ்ரிவாலும் வைத்திருக்கிறார்.
கைது: கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார்.
இந்த குற்றச்சாட்டில், மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆளுநர் சக்சேனா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேட்டு கொண்டார். அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். மறுபுறம் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பண பரிமாற்றம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. தொடர்சியாக சம்மன் அனுப்பப்பட்டு அதன் பின்னர்தான் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications