குடுமிப்பிடி சண்டை.. டெல்லி மாநகராட்சியில் முற்றிய மோதல்.. அடி-உதையால் போலீசுக்கு ஓடிய ஆம்ஆத்மி!
டெல்லி மாநகராட்சியில் மேயர் பதவியை ஆம்ஆத்மி கைப்பற்றிய நிலையில் நிலைக்குழுக்களுக்கான தேர்தலில் இருகட்சியினர் சபையிலேயே ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.
டெல்லி: டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றதை தொடர்ந்து நிலைக்குழுக்களுக்கான தேர்தல் துவங்கி உள்ளது. இதில் ஆம்ஆத்மி, பாஜகவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருகட்சியின் ஆண் கவுன்சிலர்களும் சபையின் மையப்பகுதியில் ஒருவரையொருவர் அடித்து, உதைத்து தாக்கி கொண்ட நிலையில் பெண் கவுன்சிலர்களுக்கு இடையேயும் குடுமிப்பிடி சண்டை நடந்துள்ளது. இருகட்சியினர் இடையேயான மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது ஆம்ஆத்மி, பாஜகவினரின் செயல்பாடுகள் புதிய ட்விஸ்டை ஏற்படுத்தி உள்ளன.
டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளன. இங்கு அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்றால் 126 வார்டு கவுன்சிலர்களின் ஆதரவு வேண்டும். இந்த மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. 134 வார்டுகளில் அந்த கட்சி வெற்றி பெற்றது. பாஜக 104 வார்டுகளிலும், காங்கிரஸ் 9 வார்டுகளிலும், மற்றவர்கள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். இந்த வெற்றி ஆம்ஆத்மிக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

பாஜக வெற்றிக்கு ‛செக்’
இதன்மூலம் கடந்த 2007 முதல் 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் டெல்லி மாநகராட்சியின் அதிகாரத்தை ஆம்ஆத்மி கட்சி பாஜகவிடம் இருந்து தட்டிப்பறித்துள்ளது. டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கும் நிலையில் மாநகராட்சியும் தற்போது அக்கட்சியின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்நிலையில் தான் மேயரை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஆம்ஆத்மி, பாஜக இடையேயான மோதல் காரணமாக மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

ஆம்ஆத்மி-பாஜக மோதல்
இறுதியாக புதன்கிழமை மேயர் தேர்தல் நடந்தது. ஆம்ஆத்மி சார்பில் ஷெல்லி ஓபராய், பாஜக சார்பில் ரேகா குப்தா ஆகியோர் மேயர் வேட்பாளராக களமிறங்கினர். இதில் ஆம்ஆத்மி சார்பில் ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றார். இதையடுத்து தொடர்ந்து டெல்லி மாநகராட்சியில் களேபரம் நடந்து வருகிறது. பாஜக, ஆம்ஆத்மியினர் தொடர்ந்து மோதி வருகின்றனர். நிலைக்குழு தேர்தல்களில் தோல்வி பயத்தால் பாஜகவினர் பிரச்சனையை உருவாக்கி வருவதாக ஆம்ஆத்மி குற்றம்சாட்டி உள்ளது.

ஓடிஓடி அடி-உதை
இதையடுத்து நிலைக்குழு தலைவர்கள், உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணி துவங்கியது. இதிலும் இருகட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருகட்சியின் கவுன்சிலர்களும் சபையில் மையப்பகுதியில் ஒருவரையொருவர் அடித்தும், உதைத்தும் தாக்கி கொள்கின்றனர். ஆண் கவுன்சிலர்கள் இப்படி நடக்க, பெண் கவுன்சிலர்களும் குடுமிப்பிடி சண்டையிட்டு கொண்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.

போலீசுக்கு ஓடிய ஆம்ஆத்மி
இந்நிலையில் தான் சம்பவம் தொடர்பாக ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் போலீஸ் நிலையத்தை நாடியுள்ளனர். மேயர் ஷெல்லி ஓபராய், ஷரிகா சவுத்ரி, அசு தாகூர் ஆகியோர் கம்லா மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் பாஜகவின் கவுன்சிலர்கள் மீது புகார் செய்துள்ளனர். நிலைக்குழு தேர்தலை நடத்தவிடாமல் சபையை சேதப்படுத்தியதோடு ஆம்ஆத்மி கட்சியின் ஆண், பெண் கவுன்சிலர்களை தாக்கியதாக புகார்கள் அளித்துள்ளனர். இதில் இன்று வழக்குப்பதிவு செய்யலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் இன்று டெல்லி போலீஸ் ஆணையர் சஞ்சய் அரோராவை ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் சந்திக்க உள்ளனர்.

மேயர் விளக்கம்
இதுபற்றி டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் கூறகையில், ‛‛பாஜகவினரின் கோரிக்கையை ஏற்று நிலைக்குழு தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, மேடைக்கு வந்த என்னையும் தாக்கினர். பெண் பாதுகாவலர் என்னை பாதுகாத்தார். பாஜகவினர் ஆம்ஆத்மியின் பெண் கவுன்சிலர்களையும் தாக்கியுள்ளனர். இதன்மூலம் அவர்கள் தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்கின்றனர்'' என்றார். இருப்பினும் டெல்லி மாநகராட்சியில் நிலைக்குழு தேர்தல் பாதியில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க டெல்லி மாநகராட்சியின் நிலைக்குழு தேர்தல் தொடர்பாக பாஜகவினர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications