இரட்டை இலையை மீட்க லஞ்சம்.. டிடிவி தினகரன் தொடர்புடைய வழக்கில் தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன்
டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பிளவுப்பட்டது. இந்த வேளையில் இரட்டை இலை சின்னத்தை மீட்க டிடிவி தினகரன் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் கைதாகி உள்ள சுகேஷ் சந்திரசேகர் ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. ஆனாலும் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டது. அதிமுகவில் பல அணிகள் உருவாகின. இந்த வேளையில் இரட்டை இலைக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உரிமை கோரினர். இதனால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

இந்த நிலையில் தான் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திர சேகர் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான புகாரை விசாரித்த டெல்லி குற்றப்பிரிவு போலீசார் டிடிவி தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தனர். மேலும் மல்லிகார்ஜூனா, நாது சிங், புல்கிட் குந்த்ரா, பி குமார், லலித் குமார், ஜெய் விக்ரம் ஹரன், நரேந்திர ஜெயின் உள்ளிட்டவர்களும் கைது செய்யப்பட்டனர். இதில் டிடிவி தினகரன் ஜாமீனில் வெளியே வந்தார்.
ஆனால் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் என்பது கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று சிறப்பு நீதிபதி விஷால் கோக்னி விசாரித்தார். அவர் சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்கி அதிரடியாக உத்தரவிட்டார்.

இரட்டை இலையை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் கிடைத்தாலும் அவரால் வெளியே வர முடியாது.அவர் மீது வங்கி மோசடி, பண மோசடி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்த வழக்குகளில் சுகேஷ் சந்திரசேகருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் சுகேஷ் சந்திரசேகரால் திஹார் சிறையில் இருந்து வெளியே வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications