பாஜகவுக்கு வாய்ப்பே இல்லை.. டெல்லியில் கெஜ்ரிவால் மேஜிக் தான்! 2 சர்வேக்களும் சொல்வது ஒரே விஷயம்தான்
டெல்லி: தலைநகர் டெல்லியில் அடுத்த வாரம் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன. இதற்கிடையே டெல்லியில் இப்போது எந்தக் கட்சி ஆட்சியை அமைக்க வாய்ப்புகள் அதிகம் என்பது குறித்து சில சர்வேக்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
டெல்லியில் இப்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. அதிஷி அங்கே முதல்வரா இருக்கிறார். அங்கு மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் ஆம் ஆத்மி உள்ளது.

அதேநேரம் இந்த முறை டெல்லியில் எப்படியாவது ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற முடிவோடு பாஜக களமிறங்குகிறது. இது தவிரக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் அங்கே களத்தில் உள்ளன.
சிவோட்டர்ஸ் சர்வே:
இதற்கிடையே டெல்லி தேர்தல் தொடர்பான சிவோட்டர்ஸ் அமைப்பின் முதற்கட்ட சர்வே முடிவுகள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. சி-வோட்டர் அமைப்பின் சர்வேயில் முதற்கட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 51% மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கே வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர். அதேநேரம் 41% மக்கள் மட்டுமே பாஜகவுக்கு வாக்களிக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
சுமார் 3200 பேரிடம் சி-வோட்டர் அமைப்பு சர்வே நடத்திய நிலையில், அதில் சரிபாதிக்கும் மேற்பட்டோர் ஆம் ஆத்மி அரசு தொடர வேண்டும் என்றே கருதுவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
பெண்கள் வாக்கு:
இது தொடர்பாக சி-வோட்டர் அமைப்பின் நிறுவனர் யஷ்வந்த் தேஷ்முக் நியூஸ் டாக் அமைப்பிற்கு அளித்த பேட்டியில், "ஆம் ஆத்மி கட்சிக்கு, மக்களிடையே குறிப்பாகப் பெண் வாக்காளர்கள் இடையே செல்வாக்கு இருக்கிறது. கடந்த 2020 சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கட்சிக்கு வாக்களித்த பெண்களில் 100இல் 80 பேர் மீண்டும் ஆம் ஆத்மிக்கே வாக்களிக்க விரும்புவதாகக் குறிப்பிடுகிறார்கள்.
அதேநேரம் 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த பெண்களில் 100க்கு 65 பெண்கள் மட்டுமே பாஜகவுக்கு வாக்களிக்க விரும்புவதாகச் சொல்கிறார்கள். லோக்சபா தேர்தலில் இதர கட்சிகளுக்குப் போன வாக்குகளில் சுமார் 25% ஆம் ஆத்மி கட்சிக்கு வர வாய்ப்பு இருப்பது போலவே தெரிகிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர்களின் நிலைமை தான் மோசமாக இருக்கிறது. காங்கிரசுக்கு வாக்களித்த 100 பெண்களில் 75 பேர் இந்த முறை ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இலவசங்களை வழங்குவதில் ஆம் ஆத்மி கட்சி திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது" என்றார்.
ஆம் ஆத்மி தான்:
அதேபோல NACDAOR எனப்படும் தேசிய தலித் மற்றும் ஆதிவாசி கூட்டமைப்பு நடத்திய ஆய்விலும் டெல்லியில் உள்ள தலித்துகள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க விரும்புவதாகக் கூறப்பட்டுள்ளது.. டெல்லி முழுக்க 6000க்கும் மேற்பட்டோரிடம் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.
கெஜ்ரிவால் கட்சி:
மேலும், 35 தொகுதிகளில் தலித் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கே அதிகம் ஆதரவளிக்கிறார்கள். மறுபுறம் பாஜகவுக்கு 28 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சிக்கு 7 தொகுதிகளிலும் தலித்களிடையே அதிக செல்வாக்கு இருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது அங்கே தலித் மக்களில் 44% பேர் ஆம் ஆத்மி கட்சிக்கும் 32% பேர் பாஜகவுக்கும் 21% பேர் காங்கிரஸ் கட்சிக்கும் வாக்களிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
டெல்லியைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 70 இடங்கள் உள்ள நிலையில், அதற்கு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து பிப்ரவரி 8ம் தேதி அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications