முக்கிய நெடுஞ்சாலைகளை முடக்கிய விவசாயிகள்... அடுத்த கட்டத்திற்கு செல்லும் விவசாயிகள் போராட்டம்
டெல்லி: விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள், குண்டலி-பல்வால் அதிவேக நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டத்ததில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த நவம்பர் 27ஆம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் நான்கு மாதங்களையும் தாண்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்து முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி இன்று காலை எட்டு மணி முதல் குண்டலி-மானேசர்-பல்வால் மற்றும் குண்ட்லி-காசியாபாத்-பல்வால் ஆகிய எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் 24 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க மாற்று வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தால் நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மாதம் பல்வேறு முறைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவுசெய்துள்ளனர். அதன்படி வரும் ஏப்ரல் 13ஆம் தேதி, ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுபடுத்தும் வகையில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படவுள்ளது.
அதேபோல வரும் ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு "அரசியலமைப்பு பாதுகாப்பு தினம்" மற்றும் "கிசான் பகுஜன் ஒற்றுமை நாள்" ஆகியவற்றை அனுசரிக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications