ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் மறுப்பு.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த மாதம் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து சிபிஐ காவலில் 14 நாட்கள் இருந்தார்.
பின்னர் ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது அவரை செப்டம்பர் 19-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதி நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் அவர் சிபிஐ நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல மாட்டேன் என கூறி ஜாமீன் கேட்டார்.
ஆனால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இதையடுத்து அவரது நீதிமன்றக் காவல் அக்டோபர் 3 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிதம்பரம் செல்வாக்குமிக்கவர் என்பதால் அவர் சாட்சியங்களை அழிக்கக் கூடும். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ தரப்பு கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. இதனால் அவர் அக்டோபர் 3 வரை திகார் சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அன்றைய தினம் அவருக்கு ஜாமீன் கொடுக்கப்படுமா இல்லை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து தெரியவரும்.












Click it and Unblock the Notifications