கணவன் வேறொரு பெண்ணுடன் வாழ்வது.. மனைவியை கொடுமைப்படுத்துவது இல்லை! டெல்லி ஐகோர்ட் சொல்ல என்ன காரணம்
டெல்லி: விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் போது வேறொரு பெண்ணுடன் வாழ்வது, மனைவியைக் கொடுமைப்படுத்துவதாகக் கருத முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
டெல்லியை சேர்ந்த தம்பதிக்கு அங்குள்ள குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து அளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த பெண் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட் நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தை உறுதி செய்த டெல்லி ஐகோர்ட் நீதிபதி சுரேஷ் குமார் கைட் தலைமையிலான பெஞ்ச், அவர்கள் 2005ஆம் ஆண்டு முதல் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் மீண்டும் இணைய வாய்ப்புகள் இல்லாத சூழலிலேயே இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேல்முறையீடு: கணவன் மனைவிக்கு இடையே நீண்ட காலமாகக் கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாகத் தெரிவித்த நீதிபதி, கணவர் மீது மனைவி அளித்த கிரிமினல் புகாரையும் அவர் சுட்டிக்காட்டினார். இவற்றைக் குறிப்பிட்ட நீதிபதி இதனால் கணவர் வாழ்க்கையில் அமைதி மற்றும் தாம்பத்திய உறவை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து நீதிமன்றம் கூறுகையில், "கணவன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை அவமரியாதை செய்ததால் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு மன வேதனையும் ஏற்பட்டுள்ளது. இதற்குத் தீர்வு இருப்பதாகத் தெரியவில்லை. இதில் உள்ள சாட்சியங்களை வைத்துப் பார்க்கும் போது மனைவியின் நடத்தை நிச்சயமாகக் கொடூரமானதாக இருந்துள்ளது என்று கூறலாம்.
தவறு இல்லை: இப்படி இரு தரப்பிற்கும் இடையே நீண்ட காலமாகக் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன. மேலும், கணவர் மீது மனைவி கிரிமினல் புகாரையும் கொடுத்துள்ளார். இதனால் கணவர் மன அமைதியை இழந்து, தாம்பத்திய உறவை இழந்துள்ளார். எந்தவொரு திருமண உறவிற்கும் இந்த இரண்டும்தான் அடித்தளமாக இருக்கிறது.
நீண்ட காலம் இவர்கள் பிரிந்தே இருந்துள்ளனர். இவர்கள் மீண்டும் இணைந்து வாழச் சாத்தியக்கூறு இல்லை. இந்த நிலையில், புகார் அளித்த பெண்ணின் கணவர் வேறொரு பெண்ணுடன் வாழ்வதன் மூலம் அமைதியையும் ஆறுதலையும் பெற்றிருக்கலாம். விவாகரத்து மனு நிலுவையில் உள்ள சமயத்தில் இது நடந்திருந்தாலும் இது மனைவியைக் கொடுமைப்படுத்துவதாகக் கருத முடியாது.
டெல்லி ஐகோர்ட்: விவாகரத்து பெறுவதைத் தடுக்கும் வகையில் மனைவிக்கு அந்த கணவர் வேறு எந்தக் கொடூரச் செயலையும் செய்ததாகத் தெரியவில்லை. வேறு எந்தவொரு விஷயத்தையும் மனைவியால் நிரூபிக்க முடியவில்லை" என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், குடும்ப நல நீதிமன்றம் கணவனை மனைவி கொடுமைப்படுத்தியதாகக் கூறிய நிலையில், அது சரியானதே என்றும் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்த வழக்கில் தான் கொடுமைப்படுத்தியதாக குடும்பநல நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என்று கூறி அந்தப் பெண் மேல்முறையீடு செய்திருந்தார். விவாகரத்து மனு நிலுவையில் இருக்கும் போதே கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக அவர் கூறியிருந்தார். இருப்பினும், கணவரின் இரண்டாவது திருமணம் பற்றிய ஆதாரங்களை அவர் எதுவும் சமர்ப்பிக்கவில்லை. இந்த மனுவைத் தான் டெல்லி ஐகோர்ட் இப்போது தள்ளுபடி செய்தது.












Click it and Unblock the Notifications