துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய கோரி ஜனாதிபதி மாளிகை பேரணி- ஜே.என்.யூ. மாணவர்கள் கைது
டெல்லி: தங்களது பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரை பதவி நீக்க வலியுறுத்தி டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் இன்று பேரணி நடத்தினர். பின்னர் ஜனாதிபதி மாளிகை நோக்கி சென்ற மாணவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி ஜே.என்.யூவில் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராடிய மாணவர்கள் ஜனவரி 5-ந் தேதியன்று மிக கொடூரமாக தாக்கப்பட்டனர்.

அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு
இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்கொடூர தாக்குதலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பதுடன் போராடி வரும் மாணவர்களை நேரில் சந்தித்தும் ஆறுதலும் ஆதரவும் தெரிவிக்கின்றனர்.

துணைவேந்தர் மீது அதிருப்தி
இதற்கு ஜே.என்.யூ. துணைவேந்தர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பேட்டியளித்திருந்தார். இந்நிலையில் துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஜே.என்.யூ. மாணவர்கள் இன்று பிரமாண்ட பேரணியை நடத்தினர்.

டெல்லியில் பேரணி
டெல்லி மண்டி ஹவுஸ் பகுதியிலிருந்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நோக்கி நடைபெற்ற இப்பேரணியில் இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி ராஜா, எல்ஜேடி தலைவர் சரத் யாதவ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

அரசுடன் பேச்சுவார்த்தை
பின்னர் மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகளுடன் மாணவர்கள் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாணவர்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர்.
|
மாணவர்கள் கைது
இம்மாணவர்கள் அனைவரும் அம்பேத்கர் பவன் அருகே போலீசாரால் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

ஐவர் குழு நியமனம்
இதனிடையே ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 பேர் இடம்பெற்றுள்ளதாக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications