திட்டிய மனைவி.. கண்ணீர்விட்ட நீதிபதி.. டெல்லி ஜட்ஜ் மரணத்தில் ட்விஸ்ட்.. போலீஸ் விசாரணையில் பகீர்
டெல்லி: டெல்லியின் சப்தர்ஜங் பகுதியில், டெல்லியைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வேலை செய்யும் இடத்தில் பல்வேறு அழுத்தங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இன்னும் சிலர், அந்த நீதிபதிக்கும் அவரது மனைவிக்கும் இடையே பூசல் இருந்ததாகவும் கூறுகிறார்கள். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
டெல்லி கர்கர்டூமா நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் முழுநேரச் செயலாளராகப் பணியாற்றி வந்த அமன் குமார் சர்மா.. 30 வயதான இவர் நேற்று சனிக்கிழமை தனது இல்லத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகித்தாலும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது குடும்பத்தினர் பல்வேறு புகார்களை அடுக்கி வருகின்றனர்.

தற்கொலை
சம்பவத்தன்று இரவு சுமார் 10 மணியளவில் அமன் தனது தந்தை பிரேம் சர்மாவிடம் போனில் பேசியுள்ளார். அப்போது நான் மிகுந்த சிரமத்தில் இருக்கிறேன்.. என்னால் இனி வாழ முடியாது. கடந்த இரண்டு மாதங்களாக நான் கடும் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகிறேன் என்று அழுதுகொண்டே சொல்லியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை, உடனடியாக ஆல்வாரிலிருந்து கிளம்பி நள்ளிரவு 12 மணியளவில் அமனின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் குளியலறை நீண்ட நேரமாகப் பூட்டப்பட்டிருந்ததாகவும், ஜன்னல் கண்ணாடியை உடைத்துப் பார்த்தபோது அமன் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அமன் கடந்த இரண்டு மாதங்களாக வேலை செய்யும் இடத்தில் கடும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
குடும்ப சண்டை
மேலும், குடும்ப சண்டையும் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அமனின் மனைவியும் நீதித்துறையில் தான் வேலை செய்து வருகிறார். ஆவார். சம்பவத்தன்று இரவு தம்பதியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், மனைவி கோபமாகக் கத்திக்கொண்டிருந்த நிலையில் அமன் அழுது கொண்டிருந்ததாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அமன் உயிரிழந்த பிறகு, வீட்டில் இருந்த சில நபர்கள் திடீரென அங்கிருந்து கிளம்பிச் சென்றது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
யார் இவர்
சிம்பயோசிஸ் சட்டப் பள்ளியில் பயின்று, 2021ல் நீதித்துறையில் சேர்ந்த அமன் குமார் சர்மா, ஒரு திறமையான அதிகாரியாகப் பார்க்கப்பட்டார். தற்போதைக்கு இதில் எவ்விதச் சதியும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், தற்கொலைக்கான தூண்டுதல் அல்லது துன்புறுத்தல் போன்ற அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சட்டத்தை நிலைநாட்டும் உயரிய பதவியில் இருக்கும் ஒரு அதிகாரியே, "வாழ வழியில்லை" எனக் கூறும் அளவுக்குத் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது பணிச்சுமை சார்ந்த பிரச்சனையா அல்லது குடும்பப் பூசலா என்பது விரிவான விசாரணைக்கு பிறகே தெரிய வரும்.
தீர்வில்லை
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications