மதுபான ஊழல்: கேசிஆர் மகள் கவிதாவிடம் 9 மணிநேரம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை!
டெல்லியில் கேசிஆர் மகள் கவிதாவிடம் அமலாக்கப் பிரிவினர் 9 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
டெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும் எம்.எல்.சி.யுமான கவிதாவிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் டெல்லியில் 9 மணிநேரம் துருவி துருவி விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து வரும் 16-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கவிதாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது அமலாக்கப் பிரிவு.
டெல்லியில் மதுபான விற்பனை உரிமம் தனியாருக்கு 2021-ல் வழங்கப்பட்டது. இதில் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றன என்பது வழக்கு. ஆனால் மதுவிற்பனையை அதிகரிக்கவே பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என கூறியது டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 16 பேர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ. இந்த வழக்கில் அண்மையில் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

டெல்லி அரசில் மதுபான விற்பனை உரிமம் தொடர்பான விவகாரத்தில் ஆந்திரா தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் தலைகளும் உருண்டன. இவர்களில் ஒருவர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா. தெலுங்கானா சட்டமேலவை உறுப்பினராகவும் இருக்கிறார் கவிதா. இவ்வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் விசாரணைக்கு ஆஜராக கவிதாவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்க்க கவிதா பல்வேறு காரணங்களை தெரிவித்து வந்தார். ஒருவழியாக டெல்லியில் நேற்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பாக கவிதா ஆஜரானார்.

இந்த விசாரணையின் முடிவில் கவிதா கைது செய்யப்படலாம் என தகவல் பரவியதால் டெல்லியில் பாரத் ராஷ்டிரிய சமிதி தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு இருந்தனர். கவிதாவிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சுமார் 9 மணிநேரம் துருவி துருவி விசாரணை நடத்தினர். இந்த விசாரணை முடிவடைந்த பின் கவிதா கைது செய்யப்படாமல் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதால் பதற்றம் தணிந்தது. மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக மீண்டும் வரும் 16-ந் தேதி கவிதா அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பாக ஆஜராக வேண்டும் என புதிய சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications