ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன்.. கெஜ்ரிவால் சிறைக்கு போன மறுநாளே வெளியே வரும் முக்கிய தலை
டெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட ஆம்ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங்கிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டது. இந்த வழக்கில் நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று சஞ்சய் சிங் எம்பிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் தான் ஆம்ஆத்மி கட்சி தற்போது பெரும் சிக்கலில் சிக்கி உள்ளது. அதாவது டெல்லியில் புதிய மதுபான கொள்கை வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது தான் ஆம்ஆத்மி கட்சியை முட்டுச்சந்தில் கொண்டு போய் விட்டுள்ளது.

அதாவது புதிய மதுபான கொள்கை கடந்த 2021 நவம்பரில் டெல்லியில் அமல்படுத்தப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், சட்டவிரோதமாக ஆம்ஆத்மி கட்சியின் தலைவர்களுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக ஊழல் புகார் பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
சிபிஐ விசாரணையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்தது தெரியவந்தது. இதனால் அமலாக்கத்துறையும் விசாரணையில் குதித்தது. இதையடுத்து சிபிஐ, அமலாக்கத்துறையினர் ஆம்ஆத்மி தலைவர்களின் வீடுகளில் ரெய்டு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். டெல்லி துணை முதல்வரும், கலால்துறையை நிர்வகித்தவருமான மணிஷ் சிசோடியா கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
அதன்பிறகு ஆம்ஆத்மி ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் அமலாக்கத்துறையால் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். கெஜ்ரிவாலை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. இதையடுத்து நேற்று அவர் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இப்படி டெல்லி புதிய மதுபான கொள்கை மொத்த ஆம்ஆத்மி கட்சியின் தலைவர்களுக்கும் பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் தான் ஜாமீன் கோரி ஆம்ஆத்மி சஞ்சய் சிங் உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். சஞ்சய் சிங் எம்பிக்கு டெல்லி உயர்நீதிமன்றம், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு மீது இன்று உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. சஞ்சய் சிங் எம்பி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிசேக் மான்வி சிங்கி ஆஜராகி வாதாடினார். அப்போது, அவர், ‛‛சஞ்சய் சிங் எம்பியின் வீட்டில் நடந்த சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை. மேலும் அப்ரூவராக மாறி உள்ள தினேஷ் அளித்த வாக்குமூலத்தில் சஞ்சய் சிங்கிற்கு எதிராக வலுவான ஆதாரம் இல்லை. இதனால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்'' என கேட்டார்.
இதற்கு உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து சஞ்சய் சிங் எம்பிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் இந்த உத்தரவை வேறு வழக்குக்கு முன் உதாரணமாக கொள்ளக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. சஞ்சய் சிங் எம்பி கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தான் 6 மாதம் சிறை வாசத்துக்கு பிறகு அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீனில் வெளியே வருகிறார்.
விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சஞ்சய் சிங் எம்பிக்கு ஜாமீனில் வெளியே வருகிறார். இதன்மூலம் ஆம்ஆத்மி கட்சியினர் ஓரளவு நிம்மதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications