"பயங்கர சத்தம்" டெல்லியில் மீண்டும் குண்டுவெடிப்பு? ஸ்பாட்டிற்கு ஓடிய போலீஸ்! டயர் வெடித்ததால் பீதி
டெல்லி: தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதற்கிடையே டெல்லி மஹிபால்பூரில் உள்ள ராடிசன் ஹோட்டல் அருகே வெடிச்சத்தம் கேட்டதாக இளம்பெண் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த திங்கள்கிழமை டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்று வெடித்துச் சிதறியது. அதில் இருந்த வெடிகுண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். அருகே இருந்த பல்வேறு வாகனங்களும் கூட இந்தச் சம்பவத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து என்ஐஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணையில் தொடர்ச்சியாகப் பல ஷாக் தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த அதிர்ச்சியில் இருந்தே பொதுமக்கள் மீளாத நிலையில், இன்று காலை டெல்லி மஹிபால்பூரில் உள்ள ராடிசன் ஹோட்டல் அருகே வெடிச்சத்தம் கேட்டதாகத் தகவல் வெளியானது.. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீயணைப்புத் துறைக்குக் காலை 9:18 மணிக்கு இந்த அழைப்பு வந்ததாகவும், உடனடியாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் தனக்குச் சக்திவாய்ந்த வெடிச்சத்தம் கேட்டதாகச் சொல்லி கட்டுப்பாட்டு மையத்திற்கு போன் செய்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி போலீசார் அந்தப் பகுதியை முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். எந்தவித சந்தேகத்திற்கிடமான பொருட்களும் அங்குக் கண்டெடுக்கப்படவில்லை என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளனர். அருகே இருந்த பஸ் டயர் ஒன்று வெடித்துள்ளது. அந்த சத்தத்தையே அப்பெண் குண்டுவெடிப்பு என நினைத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு போன் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications