டெல்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது.. அமலாக்க துறை அதிரடி நடவடிக்கை.. என்ன காரணம்
டெல்லி: டெல்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது.. அமலாக்க துறை அதிரடி நடவடிக்கை! என்ன காரணம்
டெல்லி: டெல்லி சுகாதாரத்துறை அமைச்சரும் ஆம் ஆத்மி முக்கிய தலைவருமான சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக களமிறங்கின.
மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களில் வென்று ஆம் ஆத்மி ஆட்சியைத் தக்க வைத்தது. ஆம் ஆத்மி தலைவர் மூன்றாவது முறையாக டெல்லி முதல்வரா பதவியேற்றுக் கொண்டார்.

டெல்லி அமைச்சர் கைது
அப்போது அவருடன் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டவர்களில் முக்கியமான ஒருவர் சத்யேந்தர் ஜெயின். டெல்லி சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள இவர், கொரோனா காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டதாக அறியப்படுகிறார். மேலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் நெருக்கமாக உள்ள ஆம் ஆத்மி தலைவர்களில் முக்கியமானவராகவும் இவர் அறியப்படுகிறார். இந்தச் சூழலில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் உள்ள சத்யேந்தர் ஜெயின் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

என்ன வழக்கு
அமலாக்கத் துறையினர் சத்யேந்தர் ஜெயினை கைது செய்துள்ளனர். கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து கடந்த 2015-16 ஆண்டுகளில் ஹவாலா பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டி, சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கி மூலமாக இல்லாமல் இரண்டு தரப்பினர் உள்ளூர் முகவர்களுடன் பெரும் தொகையைப் பரிமாற்றம் செய்து கொள்வதே ஹவாலா பரிவர்த்தனை ஆகும்.

சொத்து பறிமுதல்
சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான ₹ 4.81 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நடவடிக்கைக்குச் சரியாக இரு மாதங்களுக்குப் பின்னல், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரவிந்த கெஜ்ரிவால்
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு தனக்குக் கிடைத்த தகவலின்படி விரைவில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படலாம் என்று கூறி இருந்தார். முன்பு சத்யேந்தர் ஜெயின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் கைப்பற்றப்பட வில்லை என்றும் இருப்பினும் அவரை கைது செய்தால் சட்டப்படி அதை எதிர்கொள்வோம் என்று கூறி இருந்தார்.

முற்றும் மோதல்
இந்த கைது டெல்லியில் அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதலை அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி, தெலங்கானாவின் கே சந்திரசேகர ராவ் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசு தனது விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் நடவடி்ககையிஸ் ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இப்போது ஆம் ஆத்மி அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications