மதவெறி பேச்சு... பாஜகவின் நுபுர் சர்மாவோடு, ஒவைசி, விசிக விக்ரமன் மீதும் டெல்லி போலீஸ் வழக்கு
டெல்லி: சமூக நல்லிணக்கத்துக்கு தீங்கு விளைவுக்கும் வகையில் கருத்திட்டதாக கூறி நபிகள் நாயகம் மீது அவதூறு பரப்பிய நுபுர் சர்மாவுடன், ஐதராபாத் எம்.பி. அசதுத்தீன் ஒவைசி, விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் விக்ரமன் உள்ளிட்டோர் மீதும் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.
சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.

மும்பையில் வழக்குப்பதிவு
நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மும்பையில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக நுபுர் ஷர்மாவுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாக மும்பை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உபி கலவரம்
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசரில் இடிக்கப்படும் என காவல்துறை எச்சரித்து உள்ளது.

இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சவூதி அரேபியா, ஈரான் அமீரகம், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஆகிய இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லி போலீஸ்
இந்த நிலையில் பலர் தனக்கு மிரட்டல் விடுப்பதாக நுபுர் ஷர்மா டெல்லி காவல்துறையிடம் அளித்த புகாரை தொடர்ந்து அவருக்கு டெல்லி போலீஸ் பாதுகாப்பு வழங்கியது. அத்துடன் அவர் மீதும், நவீன் ஜிண்டால் மீதும் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. இதனிடையே அவர்களுடன் சமூக நல்லிணக்கத்திற்கு இடையே ஏற்படுத்தும் வகையில் கருத்திட்டதாக கூறி ஐதராபாத் எம்.பி. அசதுத்தீன் ஒவைசி, விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் விக்ரமன் உள்ளிட்டோர் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

விக்ரமன் விளக்கம்
இதுகுறித்து விளக்கமளித்துள்ள விக்ரமன், "இஸ்லாமியர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்ய வேண்டும் என்ற பிரச்சாரத்தை மத பயங்கரவாதிகள் கையில் எடுத்து இருக்கிறார்கள். இதைதான் நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் பேசியுள்ளனர். அவர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பேசியுள்ளோம். முஸ்லிம் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்த யதி நரசிங்நாத்துடன் ஒவைசி, நான் உட்பட பலரை சேர்த்து டெல்லி போலீஸ் வழக்கு பதிந்தது வெறுப்பு பிரச்சார குற்றச்சாட்டை நீர்த்துப் போக வைக்கும். ஜனநாயக குரல்களை ஒடுக்கும் விதமாக இதை பார்க்கிறேன். இதை நான் சட்டப்படி சந்திப்பேன்." என்றார்.












Click it and Unblock the Notifications