பாலியல் தொல்லை! பிரிஜ் பூஷண் வீட்டில் "நடித்துக் காட்டிய" பாதிக்கப்பட்ட வீராங்கனை.. பரபர பின்னணி
டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ள பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் பெண் வீராங்கனையை இன்று அவரது வீட்டுக்கு போலீசார் அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கான காரணம் வெளியாகி உள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பிரிஜ் பூஷண் சரண் சிங் உள்ளார். பாஜக எம்பியான இவர் உத்தர பிரதேச மாநிலத்தில் செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கிறார். இந்நிலையில் தான் பிரிஜ் பூஷண் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன.

ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பிரிஜ் பூஷண் சரண்சிங் மீது போக்சோ உள்பட 2 பிரிவுகளில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனாலும் கூட இன்னும் போலீசார் அவரை கைது செய்யவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் 2 நாட்களுக்கு முன்பு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூரை சந்தித்து 6 மணிநேரம் பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து வரும் 15ம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக வீரர், வீராங்கனைகள் ஒத்திவைத்துள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது பிரிஜ் பூஷண் சரண் சிங்கை இந்திய சம்மேளன தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவரது குடும்பம் மற்றும் அவரது ஆதரவாளர்களை மீண்டும் பொறுப்புக்கு வர விடக்கூடாது. மேலும் அவர் கைது செய்யப்பட வேண்டும். டெல்லி போராட்டத்தின்போது எங்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். உள்புகார்களை விசாரிக்க பெண் ஒருவர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை அனுராக் தாகூர் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அனுராக் தாகூர் கூறுகையில், ‛‛வரும் 15ம் தேதிக்குள் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி விசாரித்து முடிக்கப்படும். நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். வரும் 30ம் தேதிக்குள் இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தல் நடத்தப்படும்'' என்றார். இதற்கிடையே தான் டெல்லி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையே தான் பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் மல்யுத்த வீராங்கனையை இன்று டெல்லி போலீசார் அவரது அலுவலக இல்லத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது பெண் போலீசார் உடன் சென்றனர். அப்போது சம்பவம் நடந்தது பற்றி போலீசார் அவரிடம் நடித்து காட்ட கூறினர். இதன்மூலம் முக்கிய தகவல்களை டெல்லி போலீசார் பெற்றனர்.
இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் அலுவலக இல்லத்தில் 30 நிமிடம் ஆய்வு நடந்தது. அப்போது சம்பவம் நடந்தது எப்படி என்பது பற்றி பாதிக்கப்பட்ட பெண் நடித்து காண்பித்தார். இது வழக்கமான நடைமுறை தான்'' என்றார். இதன்மூலம் பிரிஜ் பூஷண் சரண் சிங் வழக்கு முக்கிய கட்டத்தை எட்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications