கெஜ்ரிவாலை துரத்தும் பிரச்சனை.. ஸ்வாதி மாலிவால் தாக்குதலில் வீட்டை சுத்துப்போட்ட போலீஸ்!
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து பிரச்சனையை சந்தித்து வரும் நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாகி உள்ளது. இந்த விஷயத்தில் ஸ்வாதி மாலிவாலை அழைத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் டெல்லி போலீசார், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் வரும் 25ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மொத்தம் 7 தொகுதிகள் உள்ளன. காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆம்ஆத்மி போட்டியிடுகிறது. ஆம்ஆத்மி 4 தொகுதியிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து களமிறங்கி உள்ளது.

இந்நிலையில் தான் டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 50 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் அவர் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்து பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இந்நிலையில் தான் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம்ஆத்மி கட்சி புதிய பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது. அதாவது டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரான ஸ்வாதி மாலிவால் ஆம்ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பியாக உள்ளார். இவர் தான் தற்போது ஆம்ஆத்மி மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் பிரச்சனையாக மாறி உள்ளார்.
அதாவது அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் தன்னை கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் தாக்கியதாகவும், வயிற்றில் எட்டி உதைத்ததாகவும் குற்றம்சாட்டி உள்ளார். மேலும் மாதவிடாய் நாள் எனக்கூறியும் அவர் தாக்குதலை நிறுத்தவில்லை என தெரிவித்துள்ளார். அதோடு பிபவ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகாரளித்துள்ளார்.
இந்த விவகாரம் பூதாகரமாகி உள்ளது. ஸ்வாதி மாலிமால் எம்பியாகவும், டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவியாக இருக்கும் நிலையில் அவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா? ஆம்ஆத்மியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பாஜக விமர்சனம் செய்து வருகிறது. இது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரச்சனையாக மாறி உள்ளது. அவர் செல்லும் இடங்களில் பத்திரிகையாளர்கள் இந்த கேள்வியை முன்வைக்கின்றனர். கெஜ்ரிவால் பதில் அளிக்காமல் தவிர்த்து வருகிறார். இதனையும் பாஜகவினர் விமர்சிக்கின்றனர். இது கெஜ்ரிவாலுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே நேற்று ஆம்ஆத்மி கட்சி சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ‛‛லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆம்ஆத்மி கட்சியை இழிவுப்படுத்த பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து ஸ்வாதி தவறான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்'' என தெரிவித்து இருந்தது. இதற்கு ஸ்வாதி மாலிவால் தனக்கு நியாயம் அளிக்காமல் ஆம்ஆத்மி தவறான நபரை பாதுகாக்க நினைக்கிறது என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தான் ஸ்வாதி மாலிவாலை அழைத்து கொண்டு நேற்று டெல்லி போலீசார் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்துக்கு சென்றனர். அங்கு தாக்குதல் நடந்ததாக கூறப்படும் இடத்தை போலீசார் பார்த்து ஆய்வு செய்தனர். மேலும் ஸ்வாதி மாலிவாலிடம் சம்பவம் எப்படி நடந்தது என்பது தொடர்பாக விசாரித்தனர். அதோடு தடயவியல் நிபுணர்களும் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதுவும் புதிய பிரச்சனையாக மாறி உள்ளது.
இதற்கிடையே டெல்லி 52 நொடிகள் ஓடும் ஸ்வாதி மாலிவாலின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஸ்வாதி மாவிவால் கெஜ்ரிவால் இல்லத்தில் பாதுகாப்பு ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்கிறார். அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் ஸ்வாதியை அங்கிருந்து வெளியேறுமாறு பல முறை சொல்கிறார்கள். இருப்பினும், அங்கிருந்து செல்ல மறுக்கும் ஸ்வாதி அவர்களுடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications