டெல்லி கலவரம்.. எதிர்க்கட்சிகள் விடாமல் அமளி.. மக்களவை மீண்டும் ஒத்திவைப்பு.. பணிகள் முடங்கியது!
டெல்லி: டெல்லி கலவரம் காரணமாக மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கிய சில நிமிடத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 12 மணி வரை அவையை ஒத்திவைத்து, சபாநாயகர் உத்தரவிட்டார் .
நேற்று மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கூடியது. இந்த நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.இது தொடர்பான விவாதம் கடந்த மாதம் நடந்த நிலையில், தற்போது மீண்டும் அவை கூடியுள்ளது.

ஏப்ரல் 3ஆம் தேதி வரை அவை நடைபெறுகிறது. இன்று லோக்சபாவில் முக்கியமான மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி வங்கி பரிவர்த்தனை ஒழுங்காற்று மசோதா, நேரடி வரி விவித் சே விஷ்வாஸ் எனப்படும் நிதி அமைச்சக மசோதா , விமான மசோதா எனப்படும் விமானங்கள் தொடர்பான பாதுகாப்பு துறை மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த கூட்டத்தொடர் நேற்று டெல்லி கலவரம் தொடர்பான வாதத்தால் ஒத்திவைக்கப்பட்டது. இன்று டெல்லி கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். டெல்லி கலவரம்தான் இன்று நாடாளுமன்றத்தில் முக்கிய இடம் பிடித்தது.
டெல்லி கலவரத்தில் 46 பேர் பலியானது குறித்தும், உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்பது குறித்தும் இன்று விவாதிக்க வேண்டும் என்று அவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தது. ஆனால் சபாநாயகர் ஓம் பிர்லா இதற்கு அனுமதி அளிக்கவில்லை.
டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுப்பட்டனர். அவைக்கு முன்பாக வந்து கோஷங்களை எழுப்பினார். இதனால் அவை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போனது.
இதனால் கோபம் அடைந்த ஓம் பிர்லா , எம்பிக்கள் யாரும் அவைக்கு முன்னே வர கூடாது. அவைக்கு முன் வந்து அமளி செய்ய கூடாது. அதேபோல் போஸ்டர்களை அவைக்கு எடுத்து வந்து கலகம் செய்ய கூடாது என்று கூறினார். அப்படி செய்தால் அந்த எம்பிக்கள் இந்த கூட்டத்தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தார்.
ஆனால் தொடர்ந்து எம்பிக்கள் அமளியில் ஈடுப்பட்டனர். இதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி சில நிமிடத்தில் அவை ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 12 மணி வரை அவையை ஒத்திவைத்து, சபாநாயகர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications