டெல்லி சப்போர்டுக்கு சிக்கல்! வசமாக காய் நகர்த்திய எடப்பாடி! ஓபிஎஸ் கலக்கம்? வீட்டில் போட்ட கூட்டம்!
டெல்லி: எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் காரணமாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். நேற்று டெல்லியில் ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.
இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சில அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவரின் இந்த பயணத்திற்கு பின் பல்வேறு காரணங்கள் இருப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கிறார்கள்.

சந்திப்பு
எடப்பாடி பழனிசாமி இந்த டெல்லி பயணத்தில் சில முக்கிய விஷயங்களை டெல்லி பாஜக "தலைகளுடன்" ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. வெளிப்படையாக பெரிய மீட்டிங் எதுவும் நடக்கவில்லை என்றாலும் ரகசியமாக சில சந்திப்புகளை எடப்பாடி பழனிசாமி நடத்தியதாக கூறப்படுகிறது. பாஜக - எடப்பாடி இடையிலான உறவு அவ்வளவு சுமுகமாக கடந்த சில வாரங்களாக இல்லை. மாஜி அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு, ஜிஎஸ்டி குறித்து எடப்பாடி விமர்சனம் என்று பல விஷயங்கள் காரணமாக இவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டது.

ஓ பன்னீர்செல்வம்
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் இருக்கும் உறவை புதுப்பிக்கும் வகையில் சில விஷயங்களை அங்கு இருந்த தலைவர்களுடன் கூறப்படுகிறது. அதாவது ஓ பன்னீர்செல்வம் இல்லை என்றாலும் கவலை வேண்டாம். பாஜக - அதிமுக கூட்டணி தொடரும். முக்குலத்தோர் ஆதரவை பெற ஆர்பி உதயகுமார் போன்ற நிர்வாகிகள் உள்ளனர். ஓபிஎஸ் தேவை இல்லை. இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான நட்பு தொடரும். இதில் குழப்பம் எதுவும் வேண்டாம் என்று எடப்பாடி பாஜக தலைகளிடம் நம்பிக்கையாக பேசியதாக கூறப்படுகிறது.

எடப்பாடி
2024 லோக்சபா தேர்தலில் பாஜக - அதிமுக நட்பு தொடரும் என்று உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதாவது ஓ பன்னீர்செல்வத்திற்கு டெல்லி பாஜக ஆதரவு தர கூடாது. கட்சி உறுப்பினர்கள் என் பக்கம்தான் இருக்கிறார்கள். அதனால் எனக்குத்தான் ஆதரவு தர வேண்டும் என்று எடப்பாடி டெல்லி தரப்பிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே வேலுமணி போன்ற சில மூத்த தலைகளை எடப்பாடி பழனிசாமி தன்னுடன் டெல்லி அழைத்து சென்றார் என்றும் கூறுகிறார்கள்.

டெல்லி மீட்டிங்
டெல்லி பாஜக - ஓபிஎஸ் இடையே இருக்கும் உறவை அப்படியே கட் செய்வதற்காக எடப்பாடி மேற்கொண்ட மூவ் இது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இந்த நிலையில்தான் எடப்பாடியின் பயணம் காரணமாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு கலங்கி போய் இருக்கிறதாம். அதன்படி ஓபிஎஸ்ஸுக்கு டெல்லி கொஞ்சம் நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி வந்ததாக கூறப்படுகிறது. அதோடு தற்போது அதிமுகவில் யாருக்கு உரிமை என்பது தொடர்பான புகார் தேர்தல் ஆணையத்திற்கு சென்றுள்ளது.

கலக்கம்
இந்திய தேர்தல் ஆணையம்தான் இதில் முடிவு எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் டெல்லி பாஜகவுடன் நட்பாவதற்கான முயற்சிகளை எடப்பாடி எடுத்துள்ளார். இதனால் எங்கே தன்னுடைய ஆதரவு போய்விடுமோ என்ற அச்சத்தில் ஓ பன்னீர்செல்வம் இருக்கிறாராம். அதிமுக மூத்த தலைகள் தன்னை கைவிட்டது போல டெல்லியில் தனக்கு இருக்கும் காண்டாக்ட்டுகளும் தன்னை கைவிட்டுவிடுமோ என்ற குழப்பத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு இருக்கிறதாம்.

ஆலோசனை
கடந்த ஒரு வாரமாக கொரோனா காரணமாக ஓ பன்னீர்செல்வம் நிர்வாகிகளை சந்திக்க முடியவில்லை. இதனால் அவர் டெல்லிக்கு செல்ல முடியவில்லை. இந்த நிலையில்தான் எடப்பாடி பயணம் குறித்து நேற்று இரவு ஓ பன்னீர்செல்வம் தனது வீட்டில் ஆலோசனை செய்து இருக்கிறாராம். 5 நாட்களுக்கு பின் தனது வீட்டில் நிர்வாகிகளை முதல்முறை சந்தித்து ஓ பன்னீர்செல்வம், எடப்பாடியின் டெல்லி பயணம் பற்றி நீண்ட நேரம் பேசியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications