உலகிலேயே மொழிப் போரில் பல நூறு பேர் தியாகம் செய்தது தமிழகத்தில்தான்.. பாஜகவுக்கு தெரியுமா? - கனிமொழி
டெல்லி: உலகத்திலேயே மொழிப் போராட்டங்களில் பல நூறு பேர் உயிர்த் தியாகம் செய்த ஒரே இடம் தமிழ்நாடுதான்... நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எந்த பங்களிப்பும் செய்யாத பாஜகவினருக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியுமா? மொழிக் கொள்கை பற்றி எல்லாம் பாஜக பேசலாமா? என்று லோக்சபாவில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பினார்.
லோக்சபாவில் கனிமொழி எம்பி இன்று பேசியதாவது: கேந்திரிய வித்யாலயாக்களில் மாநில மொழியைக் கற்றுத் தருவதாக சொல்கிறீர்கள். தமிழ்நாட்டில் 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளில் நாங்கள் கோரிக்கை வைத்து, கெஞ்சி போராடினால்தான் தமிழ் ஆசிரியர்களை நியமிப்பார்களாம். தமிழ்நாட்டில் 45 கேந்திரிய வித்யாலயா பளிகளில் 15-ல் தான் தமிழ் சொல்லித்தரப்படுகிறது. நீங்கள் எல்லாம் மொழிக் கொள்கையில் நியாயமாக நடந்து கொள்வீர்கள் என எப்படி நாங்கள் நம்புவது?

ரயில்வே நிலையத்தில் போய் டிக்கெட் வாங்க முடியாது. அங்கேயும் இந்தியைத் திணித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட இந்த அரசாங்கம்தான் எங்கள் மீது இந்தியை மட்டுமல்ல சமஸ்கிருதத்தையும் திணித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வழியிலும் இந்த திணிப்பு நடத்தப்படுகிறது.
எங்களுடைய தமிழ்நாட்டு முதல்வர் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். சுமார் 1.16 லட்சத்துக்கும் மேல் மாணவர்கள் இந்த காலை உணவுத் திட்டத்தால் பயனடைகின்றனர். மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்ததும் தமிழகம் என்கிற பெருமையை தலைநிமிர்ந்து சொல்வோம். நாடு முழுவதும் மதிய உணவுத் திட்டத்துக்கான மதிப்பீடு ரூ11,600 கோடி. இதில் குழந்தைகளுக்கு உணவு தரக் கூடிய திட்டத்துக்கு ஒதுக்கீடு ரூ10,000 கோடி. இந்த திட்டத்துக்கு கூட போதிய நிதி ஒதுக்காத நீங்களா எங்களுக்கு கல்வியைப் பற்றி சொல்லித் தருகிறீர்கள்? நாங்கள் இதனை ஏற்க வேண்டுமா?
புதிய கல்விக் கொள்கையில் விஸ்வகர்மா என்ற திட்டத்தைக் கொண்டு வந்து பிள்ளைகளின் கல்வி வாய்ப்பைப் பறித்து எந்த குலக் கல்வியை திராவிட இயக்கமும் திமுகவும் எதிர்க்கிறதோ அதே குலக் கல்வித் திட்டத்தைத்தான் திணிக்கிறீர்கள்.. எங்கள் பிள்ளைகளின் கல்வியை எதிர்காலத்தை நாசமாக்க துடித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்படியான புதிய கல்விக் கொள்கையை எங்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இவ்வாறு கனிமொழி எம்பி பேசினார்.












Click it and Unblock the Notifications