நாடாளுமன்றத்திற்கே வராத திமுக எம்பி சஸ்பெண்ட்.. மத்திய அரசின் நோக்கமே இதுதான்.. விளாசிய கனிமொழி
டெல்லி: அவைக்கே வராத திமுக எம்பி பார்த்திபனையும் சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள் 10, 15 பேரை சஸ்பெண்ட் செய்ய வெண்டும் என்றுதான் நினைக்கிறார்கள் என கனிமொழி எம்பி கூறினார்.
நாடாளுமன்ற லோக்சபாவில் இரண்டு பேர் அத்துமீறி நுழைந்து வண்ண புகை குப்பிகளை வீசினர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாராளுமன்றத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பாதுகாப்பு விதிமீறல் குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்து இன்று அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாக லோக்சபா எம்.பிக்கள் 14 பேர் ஒரு மாநிலங்களைவை எம்பி என மொத்தம் 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அவைக்கே வராத திமுக எம்பி பார்த்திபனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக கனிமொழி கூறியதாவது:-
பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது: அன்றாடம் நடக்கும் ஒரு விஷயமாக கடந்து போக வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நேற்று நடந்த சம்பவம் என்பது மிகப்பெரிய ஒரு பாதுகாப்பு பிழை. அவர்கள் கையில் துப்பாக்கி கொண்டு வந்திருக்கலாம். இல்லையென்றால் விஷ புகை கொண்டு வந்திருக்கலாம். எத வேண்டுமானாலும் கொண்டுவந்திருக்கலாம். பாராளுமன்றம் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதை மிக தெள்ளத் தெளிவாக காட்டக்கூடிய ஒரு சம்பவம் தான் நேற்று நடந்துள்ளது.
அதை வந்து எல்லாரும் கடந்து போகனும்.. எதிக்கட்சிகளும் இதை பற்றி கேள்வி கேட்க கூடாது என்று பாஜக நினைக்கிறது. மத்திய அரசிடம் இருந்து பிரதமரோ, உள்துறை அமைச்சரோ.. பாராளுமன்றத்திற்கு பொறுப்பேற்க வேண்டிய சபாநாயகர் கூட இதற்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் அவர்களை கொண்டுவந்து நிறுத்த தயாராக இல்லை. எந்த ஸ்டேட்மண்டும் உள்துறை அமைச்சரிடம் இருந்தோ.. குடியரசு தலைவரிடம் இருந்தோ எதுவும் வரவில்லை.
அவைக்கே வரவில்லை: அப்படிப்பட்ட ஒரு சூழலில் அவர்கள் வந்து பதில் சொல்ல வேண்டும். இது பற்றி விவரிக்க வேண்டும் என்று நாங்கள் கேள்வி கேட்கும் போது எதிக்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள். லோக்சபாவிலும், ராஜ்ய சபாவிலும் கிட்டத்தட்ட 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறோம். ஆனால் அந்த 2 பேர் பாராளுமன்றத்தில் குதித்து அமளியில் ஈடுபட்ட 2 பேருக்கு கையெழுத்து போட்டு கொடுத்த பாஜக எம்பி அவையிலேயே இருக்கிறார்.
அவரை கூப்பிட்டு எந்த விசாரணையும் நடத்தவில்லை. அவரிடம் கேள்வியும் கேட்கவில்லை. அவர் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. இது தான் ஜனநாயகமா? அவர்களுக்கு இருக்கிற ஒரே வழி யாராவது எதிரிகள் இருந்தால் அவர்களை எல்லாம் அப்புறப்படுத்திவிட வேண்டும் என்று நினைக்கக்கூடிய மனோபாவம். திமுக எம்பி பார்த்திபன் இன்று அவைக்கே வரவில்லை.
கேள்வி கேட்பவர்கள் சஸ்பெண்ட்: அப்படிப்பட்ட ஒருவரை அமளியில் ஈடுபட்டார் என்று சஸ்பெண்ட் செய்கிறார்கள் என்றால், எதிர்க்கட்சியில் இருக்கிறவர்கள் 10, 15 பேரை சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்பது தான் அவர்களுடைய எண்ணமே தவிர உண்மையிலேயே யார் மீது தவறு இருக்கிறது என்பதை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. கேள்வி கேட்பவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.. அவ்வளவுதான்.
அவர்களுக்கு பொதுவாகவே தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு இருக்கத்தானே செய்யும். அதனால் அதிகமாக எங்கள் மீது சஸ்பெண்ட்ஸ் ஆர்டர் செய்தால் கேள்வி கேட்பவர்கள் குறைந்துகொண்டே வருவார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு நிச்சயமாக இருக்கும். அவர்கள் கால் வைக்க முடியாத இடம் இங்கே தானே.. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications