தமிழக மழை, வெள்ள பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும்! நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா எம்பி நோட்டீஸ்
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டத்தில் ராமர் கோயில் தொடர்பான 'நன்றி தெரிவிக்கும் தீர்மானம்' தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இன்று தமிழக வெள்ள பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்பி திருச்சி சிவா நோட்டீஸ் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 31 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அதன்பிறகு 1 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மோடியின் 2-வது ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும்.

விரைவில் தேர்தல் நடக்க இருப்பதால் இந்த முறை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தலுக்கு பிறகு பொறுப்பேற்கும் புதிய அரசு மீண்டும் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். தேர்தலுக்கு முன்பான பாராளுமன்ற கூட்டத்தொடர் என்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக வரிந்து கட்டி நிற்கும் நிலையில், பாஜக அரசும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறாக நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் தொடர்பான 'நன்றி தெரிவிக்கும் தீர்மானம்' நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. விதி 193ன் கீழ் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.
மக்களவையில், பாஜக எம்பிக்கள் சத்ய பால் சிங், பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் சந்தோஷ் பாண்டே ஆகியோர் முன்மொழிகிறார்கள். மாநிலங்களவையில், இந்த தீர்மானம் விதி 176ன் கீழ் பாஜக எம்.பி.க்கள் கே.லக்ஷ்மன், சுதன்ஷு திரிவேதி மற்றும் ராகேஷ் சின்ஹா ஆகியோரால் தாக்கல் செய்யப்படும். தீர்மானத்தில் 'ராமர், இந்தியா மற்றும் இந்தியத்தன்மையின் சின்னம்', 'ராமர், இந்திய கலாச்சாரத்தின் சின்னம்', 'ராமர், ஒரே தேசம், வலிமையான தேசம் என்பதன் அடையாளம்' என மூன்று அம்சங்கள் இருக்கும்.
இந்த தீர்மானத்திற்காகவே பட்ஜெட் கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், கடைசி நாள் கூட்டத்தில் ராமர் கோயில் தொடர்பான 'நன்றி தெரிவிக்கும் தீர்மானம்' தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இன்று தமிழக மழை, வெள்ள பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்பி திருச்சி சிவா நோட்டீஸ் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று தமிழக, மழை வெள்ள பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்பி திருச்சி சிவா நோட்டீஸ் அளித்துள்ளார். மேலும் தமிழக வெள்ள பாதிப்பு நிவாரணத்தை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். பிப்ரவரி 9ம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைய இருந்த நிலையில், ஒரு நாள் நீடிக்கப்பட்டு பிப்ரவரி 10ம் தேதி இன்றுடன் கூட்டத்தொடர் நிறைவுறுகிறது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications