"கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுக.." தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார் திமுக எம்பி வில்சன்
டெல்லி: நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், திமுக மாநிலங்களவை எம்பி வில்சன் முக்கியமான தனி நபர் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே நாடு முழுவதும் மருத்துவ இடங்கள் நீட் தேர்வு மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. இருப்பினும், தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதை இங்குள்ள அனைத்து கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நீட் விலக்கு மசோதா
ஏற்கனவே, கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட போதிலும் அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்ததும், நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏகே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் திமுக அரசு மீண்டும் நீட் விலக்கு கோரி புதிய மசோதாவைச் சட்டசபையில் கடந்த செப். 13ஆம் தேதி நிறைவேற்றி அனுப்பியது.

ஆளுநர்
நீட் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் பாஜக எம்எல்ஏக்கள் கூட இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும், இந்த மசோதா மீது சுமார் 6 மாதங்களாக ஆளுநர் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. இந்தச் சூழலில் நேற்றைய தினம் நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாக உள்ளதாகவும் நீட் தேர்வு சமூக நீதியைக் காக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி நீட் விலக்கு மசோதாவைச் சபாநாயகருக்கே ஆளுநர் ஆர்.என்.வரி திருப்பி அனுப்பினார்.

திமுக எம்பி வில்சன்
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநரின் இந்த செயலை பலரும் சாடி வருகின்றனர். மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஆளுநர் செயல்படுவதாகக் கூறி வருகின்றனர். மேலும், கல்வி பொதுப் பட்டியலில் உள்ளதே நீட் விலக்கு பெறுவதில் காலதாமதம் ஏற்பட காரணம் எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்தச் சூழலில் திமுக மாநிலங்களவை எம்பி வில்சன், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரி தனி நபர் மசோதாவைத் தாக்கல் செய்தார்.

மீண்டும் மாநில பட்டியல்
அப்போது மாநிலங்களவையில் அவர் பேசுகையில், "1976ஆம் ஆண்டு தொழில்நுட்ப கல்வி, மருத்துவ கல்வி, பல்கலைக்கழகங்களில் சட்டத் திருத்தங்களைச் செய்ய மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் பறிக்கப்பட்டன. அவை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அப்போது அத்தனை மாநிலங்களும் இழந்த அதிகாரத்தை மறுபடியும் மீட்டெடுக்கக் கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்த புதிய அரசியலமைப்பு சட்டத்திருத்த தனிநபர் மசோதா தாக்கல் செய்கிறேன்" என்றார். மத்திய அரசு நேரடியாக நடத்தும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை மட்டும் மத்திய அரசுப் பட்டியலில் வைக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications