ஆட்சியில் பங்கு இல்லைனு ஸ்டாலின் சொன்ன அடுத்த நாள்.. ராகுலுடன் சந்திப்பு நடத்திய பிரவீன் சக்ரவர்த்தி
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு நடத்தி இருக்கிறார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி ஒத்து வராது என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது தமிழக தேர்தல் களம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளராக பிரவீன் சக்ரவர்த்தி போட்டியிட விரும்பினார். ஆனால் திமுகவின் கடுமையாக எதிர்ப்பு காரணமாக, பிரவீன் சக்ரவர்த்தி தேர்தல் களத்திற்கு வரவில்லை. இதன்பின் தவெக தொடங்கப்பட்டு விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்த போது, பிரவீன் சக்ரவர்த்தி விஜய்க்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டார்.

ஆட்சியில் பங்கு
கரூர் சம்பவத்தின் போது ராகுல் காந்தி ஆறுதல் கூற விஜய்யுடன் பேசியதற்கும் பிரவீன் சக்ரவர்த்தி முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விஜய்யுடன் சில முறை சந்திப்பு நடத்தினார். இதன்பின்னரே காங்கிரஸ் கட்சி தரப்பில் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்ற குரல் தொடங்கியது. பிரவீன் சக்ரவர்த்தி, சோடங்கர் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் ஆட்சியில் பங்கு குறித்து பேச தொடங்கினர்.
ஸ்டாலின் பதிலடி
காங்கிரஸ் தலைமை உடனான தமிழக நிர்வாகிகளின் சந்திப்புக்கு பின் ஆட்சியில் பங்கு என்ற குரல் பெரியளவில் எழவில்லை. இப்படியான சூழலில் இந்தியா டுடே கருத்தரங்கு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாட்டிற்கு ஆட்சியில் பங்கு என்பது ஒத்து வராது. அது இரு தரப்புக்கும் தெரியும். திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் சிலர் குழப்பம் ஏற்படுத்த திட்டமிட்டு செயல்படுகின்றனர் என்று கூறினார்.
தமிழ்நாடு பற்றி பிரவீன் சக்ரவர்த்தி
முதல்வர் ஸ்டாலினின் கருத்துக்கு பின் பிரவீன் சக்ரவர்த்தி, இந்தியாவில் மற்ற மாநில மக்களை போல் தமிழ்நாட்டு மக்களும் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவாகவே உள்ளனர். கூட்டணி ஆட்சி அமைவதில் பிரச்சனை இருப்பதாக தமிழக மக்கள் கருதவில்லை. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் கூட்டணி அரசை ஏற்கும் நிலையில், தமிழ்நாடு மட்டும் ஏன் ஏற்காது என்று பதிவிட்டுள்ளார்.
ராகுலுடன் பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு
பிரவீன் சக்ரவர்த்தியின் இந்த கருத்து திமுகவினரை கூடுதலாக கொந்தளிக்க வைத்துள்ளது. தமிழ்நாட்டை ஒருநாளும் பாஜகவால் ஆட்சி செய்ய முடியாது என்று ராகுல் காந்தி ஏன் பேசினார் என்று பிரவீன் சக்ரவர்த்தி ஒருமுறை கேட்க வேண்டும் என்று திமுகவினர் பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில் ராகுல் காந்தியுடன் பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு நடத்தி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சந்திப்பில் என்ன நடந்தது?
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பங்கு இல்லை என்று அறிவித்த அடுத்த நாளிலேயே இந்த சந்திப்பு நடந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதேபோல் இந்த சந்திப்பின் போது தமிழக சட்டசபைத் தேர்தல் மற்றும் கள நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications