நீதிபதியை சந்தேகப்படுவீங்களா? மனைவியின் வாக்குமூலம்.. உச்சநீதிமன்றத்தில் திகைத்த திருவண்ணாமலை கணவர்
டெல்லி: மரண வாக்குமூலங்கள் பதிவு செய்யும் விவகாரத்தில் நீதிபதிகளின் செயல்பாடுகளை சந்தேகிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.. அத்துடன், சம்பந்தப்பட்ட மனுதாரரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பெயர் ஜோதி. ரமேஷுக்கு இன்னொரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.. இந்த விவகாரம் மனைவி ஜோதிக்கு தெரியவந்து கடுமையான அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ரமேஷிடம் கேட்டுள்ளார். இதுவே தம்பதிக்குள் பிரச்சனையாக வெடித்துள்ளது.. இருவருக்கும் ஏற்பட்ட காரசார வாக்குவாதமானது, ஒரு கட்டத்தில் தகராறாகவும் மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், ஜோதியை தீ வைத்து எரித்துள்ளார்.. தீயில் உடம்பெல்லாம் வெந்து அலறிய ஜோதியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை: ஆனால், ஜோதியை பரிசோதித்த டாக்டர்கள், 95% வரை தீக்காயம் ஏற்பட்டிருப்பதால் ஜோதியை காப்பாற்றுவது கடினம் என்று சொல்லிவிட்டார்கள். இதனால், மாவட்ட நீதிபதி ஒருவர் முன்னிலையில், ஜோதியிடம் போலீசார் மரண வாக்குமூலத்தை பதிவு செய்தார்கள்..
அந்த வாக்குமூலத்தில், "என்னை தீ வைத்து எரித்தது, என்னுடைய கணவர் ரமேஷ்தான்" என்று கூறிய ஜோதி, தகராறுக்கான காரணத்தையும் முழுமையாக கூறினார்..
மாவட்ட நீதிபதி: ஜோதி கொடுத்த இந்த மரண வாக்குமூலத்தை நீதிபதியும் பதிவு செய்துகொண்டார்.. இந்த மரண வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து, திருவண்ணாமலை மகிளா நீதிமன்றம், ரமேஷுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. உடனே இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டுக்கு ஓடினார் ரமேஷ்.. ஹைகோர்ட்டும் இந்த தீர்ப்பை உறுதி செய்தது. இதனால், சுப்ரீம்கோர்ட்டுக்கு ஓடினார் ரமேஷ்.. தனக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததை எதிர்த்து மனுவும் தாக்கல் செய்தார்..
அந்த மனுவில், "மனைவிக்கு 95% வரை உடல் முழுவதும் எரிந்து மோசமாகிவிட்டது.. அப்படிப்பட்ட சூழ்நிலையில், எப்படி தனக்கு எதிராக வாக்குமூலத்தை சரியாக கொடுத்திருக்க முடியும்? உடல் முழுவதும் எரிந்திருக்கும் நிலையில், ஜோதி மயக்க நிலையில்தான் இருந்திருக்க முடியும்.
மனைவி வாக்குமூலம்: அப்படியிருக்கும்போது, எப்படி அவரிடம் இருந்து கையெழுத்து வாங்கியிருக்க முடியும்? அதனால், என்னுடைய மனைவியின் வாக்குமூலத்தையும், கையொப்பத்தையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது" என்று கேட்டுக கொண்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை, சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதிகள் விஸ்வநாதன் மற்றும் பி ஆர் ஜவான் ஆகிய அமர்வு முன்பு இன்று வந்தது.
அப்போது, ரமேஷ் தரப்பில் வழக்கறிஞர் வாதாடியபோது குறுக்கிட்டு சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் "இந்த மரண வாக்குமூலத்தை பதிவு செய்ததே, மாவட்ட நீதிபதி தான்.. மரண வாக்குமூலங்களை பதிவு செய்யும் போது நீதிபதிகளின் செயல்பாடுகளை சந்தேகிக்க முடியாது.. அதற்கான முகாந்திரமே கிடையாது" என்று திட்டவட்டமாக சொல்லி ரமேஷின் மனுவையும் தள்ளுபடி செய்தனர்.. ஆயுள் தண்டனை தீர்ப்பையும் உறுதி செய்தனர்.












Click it and Unblock the Notifications