ரயிலில் பொதுப்பெட்டி ஏன் முதல் மற்றும் கடைசியில் இருக்கு தெரியுமா? பின்னணியில் இப்படி ஒரு காரணமா?
டெல்லி: இந்திய ரயில்களில் சாமானியர்கள் பயணம் செய்யும் ஜெனரல் கம்பார்ட்மென்ட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பொதுப்பெட்டிகள் ஏன் முதல் மற்றும் கடைசியில் இருக்கிறது? என்பதற்கான காரணத்தை இப்போது பார்ப்போம்.
உலகின் மிகப்பெரிய ரயில்வே சேவை நிறுவமான இந்தியன் ரயில்வே அரசு பொதுத்துறை நிறுவனமாகும். சாமானியர்களின் வண்டி என்று அழைக்கலாம். ஏழைகளின் ரதம் என்றும் கூறலாம். வடமாநிலத்தவருக்கும் தென்மாநிலத்தவருக்கும் தொழில் ரீதியான இணைப்பை ஏற்படுத்தியதில் ரயில்களின் பங்குதான் 100 சதவீதம் .

சாமானியர்கள் ரயில்களில் ஏறித்தான் பஞ்சம் பிழைக்க மாநிலங்களை கடந்து பயணித்து வருகிறார்கள். பல ஆயிரம் மைல்கள் கடந்து தமிழகத்திற்கும், கேரளாவிற்கும், கர்நாடகாவிற்கும் வடமாநிலங்களில் இருந்து மக்கள் வருவதற்கு ரயில்களே முக்கிய காரணம். ஏன் மதுரை, திருநெல்வேலி தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரவும் மக்கள் ரயிலைத்தான் அதிகம் நாடுகிறார்கள்.ரயில் போக்குவரத்து மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கிறது.
ரயிலில் ஜெனரல் கோச் (General Coaches), ஸ்லீப்பர்,3rd AC, 2nd AC, 1st AC போன்ற பெட்டிகள் இருக்கிறது. பெரும்பாலும் பணக்காரர்கள் ஏசி பெட்டிகளிலும், நடுத்தர மக்கள் ஜெனரல் ஸ்லீப்பர் கோச்சிலும், ஏழைகள் ஜெனரல் பெட்டியிலும் பயணிக்கிறார்கள். இதில் ஜெனரல் கோச்சுகள் ரயிலின் முன் மற்றும் பின் பக்கத்தில் இருக்கும். சில சமயங்களில் பலருக்கும் வேகமாக ஓடிப்போய் கடைசி பெட்டியான ஜெனரல் கோச்சில் ஏறிய அனுபவமம் இருக்கும்.
"ஏன் ஜெனரல் கோச் ரயிலின் கடைசி அல்லது முன் பக்கத்தில் உள்ளது... ஏன் ரயிலின் மையத்தில் இல்லை?" என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா? ஒரு சில காரணங்களால் தான் ரயில்வே பொதுப் பெட்டிகளை ரயிலின் பின்புறத்தில் அல்லது முன்புறத்தல் வைத்துள்ளது. அதற்கான காரணங்களை இப்போது பார்ப்போம்.
இந்தியாவில் எல்லா ரயில்களிலுமே பெட்டிகள் அமைப்பு ஒரே மாதிரி தான் இருக்கும். அதாவது, எஞ்சினைத் தொடர்ந்து முதலில் பொதுப்பெட்டி, AC-3, AC-2, ஸ்லீப்பர் கோச்சுகள் மற்றும் ரயிலின் பின்பக்கத்தை நோக்கி அதாவது இறுதியாகவும் பொதுப் பெட்டி (ஜெனரல்) என பொருத்தப்பட்டிருக்கும். ஜெனரல் பெட்டிகள் எப்போதும் ரயிலுக்கு முன்னால் அல்லது பின்னால் இணைக்கப்பட்டிருப்பது ஏன் என்பது குறித்து சில விஷமத்தனமான தகவல்கள் இணையத்தில் பரவின. விபத்து ஏற்பட்டால் ஏழை பயணிகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இதுபோன்ற வடிவமைப்பு இருப்பதாக ட்விட்டரில் சிலர் கூறியிருந்தார்கள்.
ஆனால், இந்த குற்றசாட்டு முற்றிலும் தவறானது. ரயில் இயக்க விதிகளின்படி, ஒவ்வொரு பெட்டியின் இருப்பிடமும் ரயில்வே விதிகளின்படி தீர்மானிக்கப்படுகிறது என்றும், பணம் இல்லாதவüகள் அல்லது பணக்காரர்கள் என பாகுபாடு பார்த்து கம்பார்ட்மென்ட் அமைக்கப்படுவது இல்லை. பொதுப் பெட்டிகள் ஏன் ரயில்களின் முடிவில் அல்லது தொடக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பதற்கான உண்மையான காரணத்தை பார்ப்போம்.

பொதுவாக படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் ஏசி பெட்டிகளை விட ரயிலின் ஜெனரல் கோச் எனப்படும் பொதுப்பெட்டிகளில் தான் கூட்டம் அதிகமாக இருக்கும். பொதுப் பெட்டிகளில் ஒவ்வொரு நிலையத்திலும் அதிகமான பயணிகள் ஏறி, இறங்குவார்கள். எனவே, கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில், ரயிலின் நடுப்பகுதியில் ஜெனரல் கோச்சுகளை சேர்த்தால், ரயிலின் நடுப்பகுதியில் அதிக எடை ஏற்பட்டு, ரயில் சமநிலையில் இருக்காது. போர்டிங்-டிபோர்டிங்கிலும் சிக்கல் ஏற்படும். ஜெனரல் கம்பார்ட்மென்ட் நடுவில் இருந்தால், அது இருக்கை அமைப்போடு மற்ற ஏற்பாடுகளையும் பாதிக்கும். ரயிலின் முன் மற்றும் பின்புறம் பொது பெட்டிகளை வைப்பதன் மூலம், பயணிகள் கூட்டம் சமமாக இருக்கும். திரும்பும் பயணத்தில் இருபுறமும் என்ஜினைச் சேர்ப்பது ரயிலின் சமநிலையை பராமரிப்பதற்கு சரியாக இருக்கும்.

ரயிலின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ பொதுப் பெட்டிகளைச் சேர்ப்பது பயணிகளின் பாதுகாப்பைப் பொறுத்தவரை நன்மை அளிக்கும். அதுமட்டும் அல்ல, விபத்து, தடம் புரண்டது அல்லது தீ விபத்து போன்ற அவசர காலங்களில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக் கொண்ட இந்த பெட்டிகளில் இருந்து மக்களை விரைவாக வெளியேற்றவும் வசதியாக இருக்கும். அத்துடன் ரயில்களில் எளிதாக அடையாளம் கண்டு பொதுப்பெட்டியில் மக்கள் ஏறவும் முடியும். பொதுப்பெட்டிகள் கடைசியில் இருந்தால் எளிதாக சாமானிய மக்கள் கடைசி நேரத்தில் கூட வந்து ரயிலில் ஏறிவிட முடியும். எனவே ரயிலில் பொதுப்பெட்டிகள் முன்னாடியும் கடைசியும் வைக்க காரணம் ரயிலின் எடையை சமமாக பராமரிக்கத்தான் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications