அவ்ளோதான்.. ஓபிஎஸ்ஸுக்கு இடம் இல்லை.. “சிவப்பு இண்டிகேட்டர்” போட்ட மீட்டிங்! பாஜக மேலிடம் முடிவு?
டெல்லி : எடப்பாடி பழனிசாமி - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அதிமுக பாஜக கூட்டணி பற்றியும், 2024 தேர்தல் வியூகங்கள் பற்றியும் பேசியிருப்பது பாஜக மேலிடம் ஓ.பன்னீர்செல்வத்தை கைவிட்டு விட்டதையே காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானபிறகு முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

எடப்பாடி பிளான் : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு, தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் அளித்துள்ள நிலையில், பாஜக உடனான தனது உறவை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தச் சந்திப்பை மேற்கொண்டார் எடப்பாடி. நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்து, அதிமுக விவகாரத்தில் முழுமையாக தன் பக்கம் நிற்க வேண்டும் என்று அமித் ஷா, நட்டாவிடம் வலியுறுத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாஜக தலைமை ஆதரவு அளிக்கக்கூடாது என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் ஓபிஎஸ் அணியினர் திருச்சியில் முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தை நடத்தினர். ஓபிஎஸ்ஸுக்கு பாஜக தலைமை மறைமுகமாக ஆதரவு கொடுத்து எடப்பாடிக்கு நெருக்கடி கொடுப்பதாக ஒரு விமர்சனம் இருக்கிறது. இதைப் போக்கும் விதமாக எடப்பாடியின் மீட்டிங் அமைந்தது என்கிறார்கள்.
உறுதி செய்யும் எடப்பாடி : அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருந்தாலும், இந்த முடிவு நீதிமன்ற தீர்ப்புகளுக்கு உட்பட்டது எனத் தெரிவித்துள்ளது. ஓபிஎஸ் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், இனியும் சிக்கல் தொடருமோ என்ற குழப்பம் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. அதை பாஜக தலைமையும் பயன்படுத்தி, தேர்தல் வரை ஈபிஎஸ்ஸுக்கு குடைச்சல் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தெளிவான உத்தரவைப் பிறப்பிக்க வழிவகை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறாராம். எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா சந்திப்பின்போது பேசப்பட்ட விவகாரங்கள் ஒருபுறம் இருக்க, இந்த சந்திப்பின் பிரதான விஷயமே ஓபிஎஸ்ஸுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
பாஜக இண்டிகேட்டர் : அதாவது, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு அவருடன் அதிமுக பாஜக கூட்டணி பற்றியும் நாடாளுமன்றத் தேர்தல் பற்றியும் விவாதித்துள்ளார் அமித் ஷா. இது அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமியே அதிமுகவின் தலைமை என்பதை பாஜக மேலிடம் ஒப்புக்கொண்டதையே காட்டுகிறது என்கிறார்கள்.
இந்த மீட்டிங்கின்போது சீட் விவகாரங்களும் பேசப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமியிடமே சீட் ஒதுக்கீடுகள் பற்றி அமித் ஷா பேசியிருப்பதால், 2024 தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமியுடன் தான் சீட் பங்கீடுகள் நடக்கும் என்பதை உறுதி செய்துள்ளது பாஜக மேலிடம். ஓபிஎஸ்ஸுக்கு அதிமுக விவகாரத்தில் பாஜக தலைமை இனியும் சாதகமாக இருக்காது என்பதையே அமித் ஷாவின் செயல்பாடு காட்டியுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ஓபிஎஸ்ஸூக்கு இடம் இல்லை : ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்ப்பது பற்றி இந்த சந்திப்பின்போது அமித் ஷா ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த 2019 தேர்தலின்போது தினகரனை சேர்க்க வேண்டும் எனக் கூறிய அமித் ஷா, இப்போது ஓபிஎஸ்ஸை சேர்க்க வலியுறுத்தாதது, எடப்பாடி பழனிசாமியின் முடிவை பாஜக தலைமை ஏற்றுக்கொண்டதையே காட்டுகிறது.
நேற்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூட, ஒருசிலரை தவிர அதிமுகவில் யாரைவேண்டுமானாலும் சேர்க்க தயாராக உள்ளோம். ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் 'பி' டீமாக செயல்படுகிறார் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications