ஆர்ஆர்ஆர் படம் மோடிதான் இயக்கினார் என கிரெடிட் எடுத்துக்காதீங்க..நடாளுமன்றத்தில் கார்கே கலகல பேச்சு
இந்திய திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைத்த நிலையில், மோடிஜிதான் படத்தை இயக்கினார் என கிரெடிட் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலகலப்பாக பேசினார்.
டெல்லி: நாடாளுமன்றத்தில் ஆஸ்கர் விருதுகளை பெற்ற படங்களின் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கேவும் பாராட்டி பேசினார். அப்போது, எனது ஒரே ஒரு கோரிக்கை என்னவென்றால் இதற்கான பெருமையையும் ஆளும் கட்சி எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதே.. மோடிஜிதான் படத்தை இயக்கினார் என்று கிரெடிட் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கலகலப்பாக பேசினார்.
சர்வதேச அளவில் பெருமை மிக்க விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் பகுதியில் உள்ள டால்பி தியேட்டரில் இந்த விழா நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் இந்தியாவின் ''ஆர்.ஆர்.ஆர்.'' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு... நாட்டு...' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.

2 இந்திய படங்களுக்கு விருதுகள்
இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் மேடைக்கு சென்று ஆஸ்கார் விருதுகளை பெற்றுக்கொண்டனர். சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் முதுமலை யானை பராமரிப்பு குறித்த தமிழ் குறும்படமான 'தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' படம் ஆஸ்கார் விருது வென்றது. ஆஸ்கர் விழாவில் இரண்டு இந்திய படங்களுக்கு விருதுகள் கிடைத்ததை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

ஜெகதீப் தன்கர் பாராட்டு
இந்த நிலையில், நாடாளுமன்றத்திலும் ஆஸ்கர் விருதுகளை பெற்ற படங்களின் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவை இன்று காலை கூடியதும் மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், ஆஸ்கர் விருதுகள் வென்றதற்காக 'ஆர்ஆர்ஆர்' மற்றும் 'தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்' படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதாக கூறினார். மேலும், ''இந்த அங்கீகாரம், நமது இந்திய கலைஞர்களின் திறமை, மகத்தான படைப்பாற்றல், அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக இருப்பதாகவும்'' கூறினார்.

மோடிஜி தான் படத்தை இயக்கினார்
தொடர்ந்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே பாராட்டி பேசினார். அப்போது, மத்தியில் ஆளும் பாஜக அரசையும் கலாய்த்த மல்லிகார்ஜூன் கார்கே, எனது ஒரே ஒரு கோரிக்கை என்னவென்றால் இதற்கான பெருமையையும் ஆளும் கட்சி எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதே.. நாங்கள் பாடலை எழுதினோம்.. மோடிஜிதான் படத்தை இயக்கினார் என்று கிரெடிட் எடுத்துக்கொள்ளக்கூடாது. அது மட்டும் தான் எனது கோரிக்கை. இது நாட்டின் பங்களிப்பு" என்றார். இந்த கருத்துக்கு பாஜகவினர் முரண்படும் வகையில் பேசினர்.

அரசியல் ஆக்க வேண்டாம்
அதேபோல், மாநிலங்களவை உறுப்பினர்கள் ஜெயா பச்சன், பிரியங்கா சதுர்வேதி, பிரகாஷ் ஜவடேகரும் ஆஸ்கர் விருது வென்றதற்காக படக்குழுவினரை பாராட்டும் வகையில் கருத்து தெரிவித்தனர். அதேபோல், சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், பாலிவுட்டை புறக்கணிக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். அப்போது, அவையில் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், 'ஆர்ஆர்ஆர்' படத்தின் திரைக்கதையாளர் மாநிலங்களவை எம்.பி" என்று குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உறுப்பினர்கள் சிலர், பிரதமர் மோடியின் விருப்பத்தை கோயல் பேசுவதாக கூறினர். உடனே தலையிட்ட மாநிலங்களவை தலைவர் இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றார்.












Click it and Unblock the Notifications