“டர்பனை” ஹிஜாபோடு ஒப்பிடாதீர்கள்.. “சீக்கியம்” இந்திய கலாச்சாரம்.. உச்சநீதிமன்றம் கருத்து
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஹிஜாப் வழக்கை செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், இந்திய கலாச்சாரமான டர்பனை ஹிஜாபுடன் ஒப்பிடக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல அரசு விதித்த தடைக்கு எதிராக உடுப்பி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.
அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

உச்சநீதிமன்றம்
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு முன்பு கடந்த திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. நேற்று நடைபெற்ற விசாரணையில் நீதிபதி ஹேமந்த் குப்தா, "பூணூல், ருத்ராட்சம் சட்டைக்கு உள்ளே இருக்கிறது. யாரும் நமது சட்டையை கழற்றி பார்க்க மாட்டார்கள். அது பள்ளி ஒழுக்கத்தை மீறும் செயலாகாது. மதசார்பின்மை என்ற வார்த்தை உண்மையான அரசியலமைப்பில் இடம்பெறவில்லை." என்றார்.

மதசார்பின்மை
"மத அடையாளங்கள் அணிந்து செல்லக்கூடாது என்பது மதசார்பின்மைக்கு எதிரானது." என்று வழக்கறிஞர் காமத் கூறினார். நீதிபதி ஹேமந்த் குப்தா, "மதசார்பின்மை என்ற வார்த்தை உண்மையான அரசியலமைப்பிலேயே இல்லை." என்றார். அப்போது வழக்கறிஞர் காமத், "அரசியலமைப்பின் ஆன்மாவில் அது இருக்கிறது. முழு அரசியலமைப்பிலும் அதன் தாக்கம் உள்ளது." என்றார்.

வழக்கறிஞரின் மத அடையாளம்
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வழக்கறிஞர் காமத், "மூத்த வழக்கறிஞர் பராசரன் மத அடையாளத்துடன் இருக்கிறார். ஆனால் பொது நிலையை பாதிக்கவில்லை." என்று கூற, நீதிபதி ஹேமந்த் குப்தா, "இங்கு ஒரு ஒழுங்கு உள்ளது. நீங்கள் மற்ற வழக்கறிஞர்களை ஒப்பிடக் கூடாது.

தலைப்பாகை
மறுநாள் மருத்துவர் தவான் பாக்டியை (தலைப்பாகை) மேற்கோள் காட்டினார். ராஜஸ்தான் மக்கள் வழக்கமாக தலைப்பாகை அணிவார்கள். குஜராத்தினிலும் தலைப்பாகை வழக்கமான ஒன்றுதானே என்று மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவிடம் நீதிபதி கேள்வி எழுப்ப அவர், தலைப்பாகை அல்லது தொப்பி என்று பதிலளித்தார்.

டர்பன் பற்றி வாதம்
மதிய இடைவேளைக்கு பிறகு ஹிஜாபுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் பாஷா, "மதத்தின் அடையாளமாக இருக்கக்கூடிய ஹிஜாப் அணிந்து செல்வதற்காக மாணவி பள்ளிக்கு செல்லாமல் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். ஆனால் சிக்கியர்களும் டர்பன் அணிகிறார்கள்." என்று வாதிட்டார்

ஒத்திவைப்பு
அப்போது நீதிபதி குப்தா, "உச்சநீதிமன்ற ஐவர் அமர்வு டர்பன் அணிந்து செல்ல சீக்கியர்களுக்கு அனுமதி இருப்பதாக கூறியுள்ளது. அதன் காரணமாகவே சீக்கியர்களுடன் ஒப்பிடுவதை முறையானது அல்லது என்று நாங்கள் கூறுகிறோம். சீக்கிய மதத்தில் 5 விசயங்கள் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. சீக்கியம் இந்திய கலாச்சாரத்தின் அங்கமாக இருப்பதால் அதை ஒப்பிடாதீர்கள்." என்று கூறினார். ஆனால் வழக்கறிஞர் பாஷாவோ, இஸ்லாமும், இந்தியாவில் 1400 ஆண்டுகள் பழமையான மதம் என்று வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கை செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications