சக்சஸ் பார்முலா.. டெல்லி தேர்தலில் கர்நாடகா, ஆந்திரா பாணியை கையில் எடுக்கும் காங்கிரஸ்
டெல்லி: கடந்த 2014ல் 8 சீட், 2015, 2020 தேர்தலில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் கட்சி வெல்லவில்லை. தலைநகர் டெல்லியில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் இந்த முறை காங்கிரஸ் கட்சி தேர்தலை தனித்து சந்திக்கிறது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் ஆந்திரா, கர்நாடகாவில் அந்த கட்சி பின்பற்றிய மாஸ் திட்டத்தை டெல்லியில் காங்கிரஸ் கையிலெடுத்துள்ளது. இந்த திட்டம் என்ன? இது கைக்கொடுக்குமா? என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
டெல்லியில் தற்போது ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. கடந்த 2014 முதல் டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆம்ஆத்மி தான் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. டெல்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து வெற்றி பெற வேண்டும் என்றால் 36 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

இந்நிலையில் தான் டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை பிப்ரவரி 8 ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஆம்ஆத்மி, எதிர்க்கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.
3 கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மக்களின் மனதை கவரும் வகையில் கட்சிகள் சார்பில் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த டெல்லி சட்டசபை தேர்தல் என்பது ஆம்ஆத்மி, பாஜகவை விட காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும். ஏனென்றால் 1998, 2003, 2008 என்று 3 தேர்தல்களில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்த 3 முறையும் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீக்சித் முதல்வராக இருந்தார்.
அதன்பிறகு கடந்த 2013 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜக 32 இடங்களிலும், ஆம்ஆத்மி 28 தொகுதிகளிலும் வென்றது. இதில் பிற கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆம்ஆத்மி கட்சி அரியணை ஏறியது. முதல் முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வரானார்.
அதன்பிறகு 2015, 2020 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம்ஆத்மி கட்சி 67 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. 2020ல் ஆம்ஆத்மி 62 இடங்களிலும் பாஜக 8 இடங்களிலும் வாகை சூடியது. இதனால் இந்த முறை தலைநகர் டெல்லியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. இதனை காங்கிரஸ் கட்சியும் புரிந்து கொண்டுள்ளது.
இதனால் தான் கர்நாடகா, ஆந்திரா மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் கையிலெடுத்து ஆட்சியை பிடித்த பாணியை காங்கிரஸ் டெல்லியில் செயல்படுத்தி உள்ளது. அதாவது சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திரா,அதற்கு முன்பாக நடந்த கர்நாடகா,ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியை பிடித்தது. இதற்கு அந்த கட்சி கொடுத்த வாக்குறுதிகளும், வீடு வீடாக மேற்கொண்ட பிரசாரமும் தான்.
அந்த வகையில் தான் டெல்லி சட்டசபை தேர்தல் காங்கிரஸ் கட்சி முக்கிய 5 வாக்குறுதிகளை வழங்கி உள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சி வென்றால் 300 யூனிட் இலவச மின்சாரம், எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.500 மானியம், ரேஷன் பொருட்கள் இலவசம், பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை, அனைவருக்கும் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் காப்பீட்டு திட்டம், கல்லூரி படிப்பை முடித்து வேலை இல்லாவர்களுக்கு மாதம் ரூ.8,500 உதவி்த்தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளது.
இதுபோன்ற வாக்குறுதிகள் தான் கர்நாடகா, ஹிமாச்சல் மற்றும் ஆந்திராவில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சிக்கு கைக்கொடுத்தது. அதேபோல் தான் தற்போது காங்கிரஸ் கட்சியும் டெல்லியில் இந்த வாக்குறுதிகளை வழங்கி உள்ளது. இந்த வாக்குறுதிகள் டெல்லி மக்களை கவர்ந்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பிளஸ் பாயிண்ட்டாக உள்ளது. இருப்பினும் கடந்த 2 தேர்தலில் டெல்லியில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெல்லவில்லை. இதனால் இந்த வாக்குறுதிகளை வைத்து வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ஆந்திரா, கர்நாடகா, ஹிமாச்சலில் காங்கிரஸ் கட்சியின் வீட்டு பிரசாரம் நல்ல ரிசல்டை கொடுத்தது. அந்த நம்பிக்கையில் தான் தற்போது காங்கிரஸ் கட்சி டெல்லியில் வீடு வீடாக பிரசாரத்தை தொடங்கி திட்டமிட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் இந்த பிரசாரம் முன்னெடுக்கப்பட உள்ளது. குறிப்பாக தலித் மற்றும் சிறுபான்மையினர் அதிகம் உள்ள 20 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதோடு கடந்த தேர்தலில் வெறும் 4 சதவீத ஓட்டுகளை மட்டுமே காங்கிரஸ் பெற்ற நிலையில் இந்த முறை 15 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் செயல்பட திட்டமிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இந்த வியூகம் கர்நாடகா, ஆந்திரா, ஹிமாச்சலில் கைக்கொடுத்த நிலையில் டெல்லியில் கைக்கொடுக்குமா ? என்பதை அறிய நாம் தேர்தல் முடிவு வெளியாகும் பிப்ரவரி 8 ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். அதோடு காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் வாக்குறுதி மற்றும் பிரசார யுக்திக்கு பதிலடியாக ஆளும் ஆம்ஆத்மி மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவும் ஈடுகொடுக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இதனால் டெல்லி சட்டசபை தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications