ரூ.20 லட்சம் லஞ்சம்! அமலாக்கத்துறை துணை இயக்குநர் கைது! சிபிஐ அதிரடி நடவடிக்கை
புவனேஸ்வர்: சட்டவிரோத பணப் பரிவர்த்தனையை தடுக்க வேண்டிய அமலாக்கத்துறை அதிகாரிகள், லஞ்ச வழக்கில் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இன்று அமலாக்க இயக்குநரகத்தின் ஒடிசா துணை இயக்குநர் சிந்தன் ரகுவன்ஷி, ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
புவனேஸ்வரைச் சேர்ந்த சுரங்க நிறுவனர் ஒருவரை, அவர் மீது பதியப்பட்டிருக்கும் வழக்கை ரத்து செய்வது கூறி சிந்தன் லஞ்சம் கேட்டிருக்கிறார். ஆனால் லஞ்ச தொகை அதிகமாக இருந்ததால் இதற்கு சுரங்க நிறுவனர் ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும் தொடர்ந்து நச்சரித்து லஞ்ச தொகையை ரூ.50 லட்சமாக சிந்தன் குறைத்திருக்கிறார். இதற்கு மேலும் குறைக்க முடியாது என்று கட் அன்ட் ரைட்டாக கூறியிருக்கிறார்.

இதனையடுத்து தான் மிரட்டப்படுவது தொடர்பாக சிபிஐ-க்கு சிந்தன் புகார் அளித்திருக்கிறார். புகாரை விசாரிக்க தொடங்கிய சிபிஐ-க்கு, புகார் உண்மைதான் என்பது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து இன்று மாலை புவனேஸ்வரில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து முதற்கட்டமாக ரூ.20 லட்சம் தருவதாக சிந்தனிடம் சுரங்க நிறுவனரை சொல்ல சொல்லியிருக்கிறார்கள். இதை நிறுவனர் அப்படியே சொல்ல சிந்தனும் ஓகே சொல்லிவிட்டார்.
சொன்ன நேரத்திற்கு சிந்தன் ஹோட்டல் அறையில் காத்திருக்க, நிறுவனர் பணத்துடன் அங்கு சென்றிருக்கிறார். பணம் கொடுக்கப்பட்ட நிலையில், சிந்தனை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்திருக்கிறார்கள். அமலாக்க இயக்குநரகத்தின் ஒடிசா துணை இயக்குநர் ஒருவர் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறையை கண்டு எதிர்க்கட்சிகள் நடுங்கி வருகிறது என்று மத்தியில் ஆளும் பாஜக தலைவர்கள் பேசி வரும் நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஒவ்வொருவராக கைதாகி வரும் சம்பவங்கள் விவாதங்களாக வெடித்திருக்கிறது. கடந்த 18ம் தேதி கேரள மாநிலத்தில் அமலாக்கத்துறை அதிகாரி மீது அம்மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கொச்சியை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு இதேபோல இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த அமலாக்கத்துறை துணை இயக்குநர் ஒருவரை சிபிஐ அதிகாரிகள் ரூ.55 லட்சம் லஞ்சமாக பெற்ற வழக்கில் கைது செய்திருந்தனர். அதற்கும் முன்னர் தமிழ்நாட்டில் அங்கித் திவாரி என்கிற அமலாக்கத்துறை அதிகாரி லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications