சுகேஷ் சந்திரா பண மோசடி வழக்கு.. பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம்.. அமலாக்கத்துறை விசாரணை
டெல்லி: கர்நாடகாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரா என்பவர் மீதான பண மோசடி வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் திங்கட்கிழமை விசாரணை நடத்தினர்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். அதிமுக பிளவுபட்டு இருந்த போது இரட்டை இலை சின்னத்தை மீட்கக் கடந்த 2017இல் டிடிவி தினகரன் தரப்புக்காகத் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் டெல்லி குற்றவியல் காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.
இந்த வழக்கில் கைதான டி.டி.வி.தினகரன் உட்பட பலர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும் சுகேஷ் சந்திரசேகர் மட்டும் சிறையில் உள்ளார். சிறையில் இருந்தவாறே இவர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சுகேஷ் சந்திரா
இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்ததைப் போல பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு இவர் பல கோடி ரூபாய் வரை முறைகேடாகச் சம்பாதித்துள்ளதாக மத்திய அமலாக்கத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் டெல்லி அமலாக்கத் துறை உயர் அதிகாரிகள் பெங்களூருவில் உள்ள சுகேஷ் சந்திராவின் வீடு, சென்னையை அடுத்த கானத்தூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பங்களா உள்ளிட்ட பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் விசாரணை
அதில் 20 சொகுசு கார்கள், லேப்டாப் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மீதான பண மோசடி வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் திங்கட்கிழமை விசாரணை நடத்தினர். காலை சுமார் 10.30 மணியளவில் தொடங்கி இந்த விசாரணை ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது.

சாட்சியம்
அப்போது பண மோசடி வழக்கில் சாட்சியமாகச் சேர்க்கப்பட்டுள்ள நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசின் வாக்குமூலத்தை அமலாக்கத்துறை பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தவாறே செய்த மோசடியில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசும் பணத்தை இழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சிறையிலிருந்து மோசடி
சுகேஷ் சந்திரா, சிறையிலிருந்தவாறே வெளியில் இருக்கும் முக்கிய புள்ளிகளைத் தொடர்பு கொண்டுள்ளார். அவர்களை பிளாக்மெயில் செய்து கேஷ் சந்திரசேகர் பல கோடி ரூபாய் முறைகேடாக சம்பாதித்துள்ளார். இப்படி ஒரு தொழிலதிபரிடம் இருந்து மட்டும் ஓரே ஆண்டில் ரூ 200 கோடி வரை சிறையில் இருந்தவாறே பணத்தைப் பிடுங்கியுள்ளார் சுகேஷ் சந்திரசேகர். அந்தத் தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள சுகேஷ் சந்திராவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சிறையில் இருந்தவாறே சுமார் 20 தொழிலதிபரிடம் இருந்து, இவர் பணத்தை ஏமாற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications