‛‛5 முறை எஸ்கேப்’’.. கெஜ்ரிவாலுக்கு புதிய சிக்கல்.. கோர்ட்டுக்கு போன அமலாக்கத்துறை.. அடுத்து என்ன?
டெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் சம்மன் வழங்கியும் 5 முறை ஆஜராகாமல் இருக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை என்பது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் ஆம்ஆத்மியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் தான் டெல்லியில் புதிய மதுபான கொள்கையை செயல்படுத்துவதில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தத. இது ஆம்ஆத்மி கட்சிக்கு பெரிய பிரச்சனையாக மாறியது. இதையடுத்து அந்த புதிய மதுபான கொள்கை கைவிடப்பட்டது.

இருப்பினும் ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டார். சிபிஐ விசாரணையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. இதுதொடர்பாக ஆம்ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பு பிரிவை சேர்ந்த நிர்வாகி விஜய் நாயர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். டெல்லி துணை முதல்வராகவும், கலால்துறை அமைச்சராகவும் இருந்த மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் எம்பி கைது செய்யபப்ட்டுள்ளனர்.
இதற்கிடையே தான் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழக்கு தெடர்பாக சிபிஐ சம்மன் அனுப்பியது. சிபிஐ விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆனால் விசாரணைக்கு வரும்படி அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு கெஜ்ரிவால் பதிலளிக்கவில்லை. தொடர்ந்து 5 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் உள்ளார்.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்புவதால் விசாரணைக்கு ஆஜராகப்போவது இல்லை என கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனால் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால- அமலாக்கத்துறை இடையே மோதல் போக்கு உள்ளது.
இத்தகைய சூழலில் தான் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கான சம்மனை ஏற்காமல் இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது. மேலும் சம்மன் அனுப்பபட்டது தொடர்பான சில விபரங்களை அமலாக்கத்துறை அளித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பிப்ரவரி 7 ம்தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை என்பது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராக உத்தரவிடப்பட்டதால் அதனை கண்டிப்பாக அவர் பின்பற்றியே ஆக வேண்டும். இப்படி விசாரணக்கு செல்லும்போது அவர் அமலாக்கத்துறையால் கைதும் செய்யப்பட உள்ளது. இதனால் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய பிரச்சனையில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications