நெருக்கும் ED.. நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டாவுக்கு பறந்த சம்மன்
டெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா மற்றும் லட்சுமி மஞ்சு உள்ளிட்டவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. சட்டவிரோத சூதாட்ட செயலி தொடர்பான விசாரணைக்கு வரும்படி அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரம்பி உள்பட பல்வேறு சூதாட்ட செயலிகள் நடைமுறையில் உள்ளன. இந்த செயலிகளை பயன்படுத்தி பலரும் பணத்தை இழக்கின்றனர். ஒரு தரப்பினர் அதிகப்படியான பணத்தை இழந்து தற்கொலைகள் கூட செய்துள்ளனர்.

இதனால் சூதாட்ட செயலிகளை தடை செய்ய வேண்டும். எந்த காரணம் கொண்டும் நம் நாட்டில் இந்த செயலி பயன்பாட்டில் இருக்க கூடாது என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது.
இருப்பினும் கூட சில பிரபலங்கள் சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரம் செய்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களுக்கு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தெலுங்கனா மாநிலம் ஹைதராபாத் அருகே சைபராபாத் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நடிகை நிதி அகர்வால், பிரணிதா சுபாஷ், மஞ்சு லட்சுமி உள்பட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை ECIR பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் தான் வழக்கு தொடர்பாக நடிகர்களுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா மற்றும் லட்சுமி மஞ்சு ஆகியோருக்கு அமலாக்கத்துறை தனித்தனியாக சம்மன் அனுப்பி உள்ளது. ஒவ்வொருவரையும் தனியாக அழைத்து விசாரிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை அமலாக்கத்துறை எடுத்துள்ளது.
அதன்படி ராணா டகுபதியை ஜூலை 23ம் தேதியும், பிரகாஷ் ராஜை ஜூலை 30ம் தேதியும், விஜய் தேவரகொண்டாவை ஆகஸ்ட் 6ம் தேதியும், லட்சுமி மஞ்சுவை ஆகஸ்ட் 13ம் தேதியும் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த நடிகர்களுக்கு பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications