நிலக்கரி கடத்தல்: மமதா உறவினர் அபிஷேக் பானர்ஜியிடம் இன்று அமலாக்கப்பிரிவு விசாரணை-பரபரக்கும் டெல்லி
டெல்லி: நிலக்கரி கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜியிடம் இன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் டெல்லியில் விசாரணை நடத்த உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
மத்திய பா.ஜ.க. அரசுக்கும் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்கிறது. அண்மையில் முடிவடைந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து கட்சி தாவிய பலருக்கும் போட்டியிட பாஜக வாய்ப்பு தந்தது.
அப்படி சீட் வாங்கியவர்கள் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இதனால் கட்சி மாறிப் போனவர்கள் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பி வருகின்றனர். பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸுக்கு திரும்பும் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

அமைச்சர்கள் கைதும் மமதாவும்
மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிய உடனேயே அதன் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர். நாரதா லஞ்ச ஊழல் முறைகேட்டில் ஃபிர்ஹாத் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி மற்றும் எம்.எல்.ஏ மதன் மித்ரா ஆகியோருடன் முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி கைது செய்யப்பட்டனர். அப்போது உடனடியாக மம்தா பானர்ஜி, படை பரிவாரங்களுடன் நேரடியாக சிபிஐ அலுவலகம் சென்று தனது கண்டனத்தை தெரிவித்தார். அதேபோல் அடுத்தடுத்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு பல்வேறு வழக்கு விசாரணைகளுக்காக மத்திய விசாரணை அமைப்புகளான சி.பி.ஐ, அமலாக்கப் பிரிவு ஆகியவற்றின் மூலம் சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கு பதிலடியாக மேற்கு வங்க அரசு, மாநில பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.

அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன்
இந்த நிழல் யுத்தத்தின் உச்சகட்டமாக மமதாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி எம்.பி. மீது நிலக்கரி கடத்தலில் பணமோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலக்கரி கடத்தல் வழக்கில் இன்று அபிஷேக் பானர்ஜியும் அவரது மனைவியும் டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்குப் பின்னரே அபிஷேக் பானர்ஜி மீது நடவடிக்கை பாயுமா? என்பது தெரிய வரும்.

தூக்கில் தொங்க தயார்
இதனிடையே தனக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியது தொடர்பாக கருத்து தெரிவித்த அபிஷேக் பானர்ஜி, நான் சட்டவிரோதமாக 10 காசு கூட சம்பாதிக்கவில்லை. அப்படி நான் ஊழல் முறைகேடு செய்தேன் என நிரூபித்துவிட்டால் பொதுமேடையில் மக்கள் முன்னிலையில் தூக்கில் தொங்க தயாராகவே உள்ளேன். இதனையே ஏற்கனவே கூறியிருக்கிறேன். இப்போதும் கூறுகிறேன் என்றார்.

மமதா அரசு பதிலடி
இந்நிலையில் மேற்கு வங்க அரசியலில் புதிய திருப்பமாக பாஜக எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரிக்கு மர்ம மரண வழக்கில் கொல்கத்தா போலீசார் சம்மன் அனுப்பி இருக்கின்றனர். 2018-ம் ஆண்டு சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு அதிகாரி சக்ரவர்த்தி மர்மமான முறையில் உயிரிழந்தது சர்ச்சையானது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொல்லப்பட்டாரா? என்கிற மர்மம் நீடித்தது. இந்த வழக்கில்தான் சுவேந்து அதிகாரியை ஆஜராக உத்தரவிட்டிருக்கிறது கொல்கத்தா போலீஸ்.

மர்ம மரண வழக்கு
சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு அதிகாரி மரண வழக்கில், கடந்த ஜூலை மாதம் மேற்கு வங்க சி.ஐ.டி. போலீஸாரின் ஒருபிரிவினர், புர்பா மெதினாபூர் நகரில் விசாரணை நடத்தினர். அங்கு கந்தி போலீஸ்நிலையத்தில்தான் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் சக்ரவர்த்தி. அவரது மனைவி கஞ்சிலால் சக்ரவர்த்தியிடமும் சிஐடி போலீஸார் ஏற்கனவே விசாரித்தனர். இதனையடுத்தே இப்போது சுவேந்து அதிகாரியை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர் மேற்கு வங்க போலீசார்.












Click it and Unblock the Notifications