வென்றார் எடப்பாடி.. தோல்வி அடைந்த ஓபிஎஸ்.. தீர்ப்பு சொல்வது என்ன? இதுதான் ரொம்ப முக்கியம்
இந்த தீர்ப்பின் இறுதி அர்த்தம் எடப்பாடி வென்றார்.. ஓபிஎஸ் தோல்வி அடைந்தார்.
டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.
அதிமுக பொதுக்குழு வழக்கில் டெல்லி உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லும். அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்கிறோம். அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
அதிமுக பொதுக்குழு கடந்த வருடம் ஜூலை 11ம் தேதி கூடியது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன. அதோடு இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதை எதிர்த்து அதிமுக சார்பாக அவைத்தலைவர் தமிழ் மகன், தனியாக எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கில்தான் இன்றும் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கினர்.

பொதுக்குழு வழக்கு
இந்த பொதுக்குழு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு
1. அதிமுக பொதுக்குழு செல்லும். அதாவது ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும். எனவே அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் எல்லாம் செல்லும்.
2. பொதுக்குழு கூடிய விதம் செல்லும். அதாவது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்டாமல் அவைத்தலைவர் மூலம் பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை மூலம் பொதுக்குழு கூட்டப்பட்டது சரி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
3. ஆனால் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் சிவில் வழக்கை பாதிக்காது என்று கூறப்பட்டு உள்ளது. அதாவது பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்குகளை தொடர்ந்து விசாரிக்கலாம்.

முக்கிய பாயிண்ட்ஸ்
4. இந்த தீர்ப்பு காரணமாக அதிமுகவில் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்ற முடிவு வரவில்லை. தீர்மானங்கள் செல்லும் என்று இன்னும் உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை. ஆனால் பொதுக்குழு செல்லும் என்றாலே அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்பதே மறைமுக அர்த்தம். ஆனால் இதை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் சிவில் கோர்ட்டில் வாதம் வைக்கலாம். இதுதான் மிக முக்கியம்
5. பொதுக்குழுவில் பொருளாளர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அது இப்போதைக்கு செல்லும். இதுதான் மிக முக்கியம். இனி ஓபிஎஸ் அதிமுக உறுப்பினர் இல்லை.
6. எடப்பாடி மூலம் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டார். அதுவும் இப்போதைக்கு செல்லும்.

செல்லும்
7. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது இப்போதைக்கு செல்லும் என்பதால் அவர் கட்சியில் அதன்பின் எடுத்த முடிவுகள் எல்லாம் செல்லும். அதாவது அவர் கட்சியில் இருந்து நீக்கியது, எடுத்த நடவடிக்கை எல்லாம் செல்லும். இதை எதிர்ப்பு ஓபிஎஸ் சிவில் வழக்கு போடலாம்.
8. எடப்பாடி இந்த வழக்கில் முடிவு வரும் வரை எந்த மாற்றமும் செய்ய கூடாது என்று இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த இடைக்கால தடை தற்போது நீக்கப்பட்டு உள்ளது. இதன் அர்த்தம் இனி எடப்பாடி கட்சியில் என்ன முடிவையும் எடுக்கலாம்.

ஓபிஎஸ் மனு
9. ஓபிஎஸ் மனு மொத்தமாக தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அதாவது சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.
10. இனி சிவில் கோர்ட்டில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு வாதம் வைக்கும்.
இந்த தீர்ப்பின் இறுதி அர்த்தம் எடப்பாடி வென்றார்.. ஓபிஎஸ் தோல்வி அடைந்தார்.












Click it and Unblock the Notifications