நமஸ்தே பழனிசாமி ஜி.. வாசல் வரை வந்து நின்று வரவேற்ற ஜே.பி.நட்டா! எடப்பாடி முகமெல்லாம் பூரிப்பு!
டெல்லி: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் வாசல் வரை வந்து நின்று வரவேற்றதால் அகமகிழ்ந்து போயிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லி அசோகா ஹோட்டலில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் தமிழகத்திலிருந்து அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் தம்பிதுரை வரவேற்றார். விமான நிலையத்திலிருந்து நேராக அசோகா ஹோட்டலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு காரைவிட்ட இறங்கியதும் ஜே.பி.நட்டாவும், பியூஷ் கோயலும் வாசலில் நின்று வரவேற்றதால் முகமெல்லாம் ஒரே பூரிப்பு.
தன்னுடன் வந்திருந்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தளவாய் சுந்தரம் ஆகியோரை ஜே.பி.நட்டாவிடம் அறிமுகம் செய்து வைத்த எடப்பாடி பழனிசாமி பிறகு ஹோட்டலுக்குள் சென்றுவிட்டார். பொன்முடி அமலாக்கத்துறை வளையத்தில் இருப்பதாலோ என்னவோ விழுப்புரத்தில் அவரை எதிர்த்து அரசியல் செய்து வரும் சி.வி.சண்முகம் டபுள் உற்சாகமாக காணப்பட்டார்.
இன்று மாலை நடக்கும் கூட்டத்துக்கான முன்னேற்பாடுகளை பார்வையிடுவதற்காக ஜே.பி.நட்டா அசோகா ஹோட்டலுக்கு முன் கூட்டியே வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. அந்தத் தருணத்தில் தான் இந்த வரவேற்பு நிகழ்வும் நடந்துள்ளது. இதனிடையே எடப்பாடி பழனிசாமியின் இந்த டெல்லி பயணத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் ராஜ் சத்யனும் உடனிருந்தார்.
இதனிடையே எடப்பாடி பழனிசாமியிடம் தமிழகத்தை சேர்ந்த செய்தியாளர்கள் ஏதோ கேள்வி எழுப்பியபடி மைக்கை அருகில் கொண்டு சென்ற போது, பிறகு பேசுகிறேன் என்றவாறு பிரஸ்மீட்டை தவிர்த்துவிட்டார்.












Click it and Unblock the Notifications