வேட்பு மனுவை தள்ளுபடி செய்த தேர்தல் ஆணையம்.. உச்சநீதிமன்றம் சென்ற மாஜி ராணுவ வீரர்
டெல்லி: வாரணாசி மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக களமிறங்கிய, முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவ் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சொன்னபடி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள வழக்கில் வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் ஆணையம் கேட்ட அனைத்து ஆவணங்களையும் சரியாக தாக்கல் செய்துவிட்டேன். நான் கொடுத்த ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கிறது.

இருந்தும் தேர்தல் ஆணையம் என்னுடைய மனுவை உரிய காரணமின்றி நிராகரித்து உள்ளது. இதனையடுத்து என்னுடைய வேட்புமனுவை ஏற்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் சரியில்லை என குறை கூறி, வீடியோ வெளியிட்டவர் தான் இந்த தேஜ் பகதூர் யாதவ். ராணுவத்தை குறை கூறி வீடியோ வெளியிட்டதற்காக இவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக தேஜ் பகதூர் யாதவ் சமீபத்தில் அறிவித்திருந்தார். ராணுவத்துறையில் நடைபெற்று வரும் ஊழலை அம்பலப்படுத்தியதால் தான் என்னை பணிநீக்கம் செய்தனர். எனவே தான் பிரதமரை எதிர்த்து போட்டியிட முடிவு செய்தேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தேஜ் பகதூர் யாதவை தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சமாஜ்வாதி கட்சி கடைசி நேரத்தில் அறிவித்தது. சமாஜ்வாதியின் வேட்பாளராக களமிறங்கிய தேஜ் பகதூரின் வேட்புமனுவை நிராகரிக்கப்பட்டது.
வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளதாக தேஜ் பகதூர் தரப்பு தெரிவித்திருந்தது. கூறியபடியே தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தேஜ் பகதூர் யாதவ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது உச்சநீதிமன்றமும் அவரது மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications