அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் தேர்தல் நிதி பத்திரங்கள்.. எஸ்பிஐ வங்கிகளில் இன்று முதல் விற்பனை
டெல்லி: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் 29வது தவணை தேர்தல் நிதி பத்திரங்கள் பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் இன்று முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது நிறுவனங்கள் ரொக்கமாகவோ, காசோலையாகவோ நன்கொடை கொடுப்பதற்கு பதிலாக, தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவித்தது. இதனையடுத்து இது 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது.

இதன் மூலம் எஸ்பிஐ வங்கி ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. இவை மற்ற மாதங்களில் 10 நாட்களும் தேர்தல் இருக்கும் மாதங்களில் அனைத்து நாட்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதன் மீதான விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் தேர்தல் பத்திரங்களை வாங்குவோரின் அடையாளம் மறைக்கப்படுவது சரியல்ல என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு எதிரான வாதத்தை வைத்த சொலிசிட் ஜெனரல் துஷார் மேத்தா,
"தேர்தல் பத்திரங்களை வாங்குவோரின் அடையாளம் மறைக்கப்படுவது சரிதான். ஏனெனில் சிலர் குறிப்பிட்ட கட்சிக்கு அதிக அளவில் நிதியளித்திருப்பார்கள். ஆனால் அவர்கள் நிதியளித்த கட்சி தோல்வியடைந்தால், வெற்றியடைந்த கட்சியினர், தோல்வியடைந்த கட்சிக்கு நிதியளித்தவர்களை பழிவாங்கக்கூடும். எனவே தேர்தல் பத்திரங்களை வாங்குவோரின் அடையாளம் மறைக்கப்படுவது சரிதான்" என்று கூறியிருந்தார். மேலும் அரசியல் கட்சிகள் எங்கிருந்து பணம் பெறுகின்றன என்கிற விவரங்களை அறிய மக்களுக்கு உரிமை இல்லை என்று மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு இம்மாதம் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களுக்கு வெவ்வேறு தேதிகளில் ஒரே கட்டமாகவும், இரண்டு கட்டங்களாகவும் நவம்பர் 7 முதல் 31ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட உள்ளன.
இந்தச் சூழலில், தேர்தல் நிதிப் பத்திரங்கள் விநியோகத்துக்கான அனுமதியை மத்திய அரசு கடந்த சனிக்கிழமை வழங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேர்தல் நிதி பத்திரங்கள் அனுமதிக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் இன்று முதல் 20ம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications