இந்தியாவில் நுழைந்த எலான்மஸ்க்கின் ‛ஸ்டார்லிங்’.. வானில் 550 கிமீ உயரத்தில் இருந்து இனி இண்டர்நெட்
டெல்லி: நம் நாட்டில் இண்டர்நெட் சேவையை வழங்க உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் ‛ஸ்டார்லிங்' நிறுவனத்துக்கு உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனை முயற்சி இன்னும் 15 முதல் 20 நாட்களில் தொடங்க உள்ளது. அதன்பிறகு மக்களுக்கு ‛ஸ்டார்லிங்' நிறுவனத்தின் செயற்கைகோள் வழியாக அதிவேக இண்டர்நெட் சேவை கிடைக்கும்.
உலக பணக்காரர்களில் முதல் இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் பெரும் தொழிலதிபராக இருந்து வருகிறார். எக்ஸ் வலைதள பக்கத்தின் உரிமையாளர் இவர் தான். இதுதவிர ‛ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் துணை நிறுவனம் ஸ்டார்லிங்கையும் நடத்தி வருகிறது. இந்த ‛ஸ்டார்லிங்' என்பது செயற்கைகோள் மூலம் இண்டர்நெட் சேவையை வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

செயற்கைகோள் வழியாக இண்டர்நெட் வழங்குவதால் அனைத்து இடங்களிலும் இந்த சேவையை தங்கு, தடையின்றி எலான் மஸ்க்கின் நிறுவனத்தால் வழங்க முடியும். நம் நாட்டிலும் ‛ஸ்டார்லிங்' இண்டர்நெட் சேவையை துவங்க 2 ஆண்டுக்கு முன்பு அனுமதி கோரி எலான் மஸ்க் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் உள் நாட்டு பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக அனுமதி கொடுக்கவில்லை. தொடர்ந்து அனுமதி தாமதிக்கப்பட்டு வந்தது. 2 ஆண்டு காத்திருந்த ‛ஸ்டார்லிங்' நிறுவனத்துக்கு இப்போது அனுமதி கிடைத்துள்ளது. செயற்கைகோள் மூலம் இண்டெர்நெட் சேவையை தொடங்குவதற்கான ‛சேட்டிலை கம்யூனிகேஷன்' என்ற உரிமத்தை மத்திய தொலைத்தொடர்புத்துறை வழங்கி உள்ளது.
இந்த உரிமத்தை இதுவரை 2 நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தியா வழங்கி இருக்கிறது.
Eutelsat's one Web மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்களுக்கு பிறகு எலான் மஸ்கின் ‛ஸ்டார்லிங்' நிறுவனத்துக்கு தான் இந்த லைசன்ஸ் கிடைத்துள்ளது. எனவே ‛ஸ்டார்லிங்' தனது இன்டர்நெட் சேவையை இந்தியாவிலும் விரைவில் தொடங்க உள்ளது.
இதற்கான சோதனை இன்னும் 15 முதல் 20 நாட்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஸ்பெக்ட்ரம் விரைவில் ‛ஸ்டார்லிங்' நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளது. இந்த சோதனையை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக ‛ஸ்டார்லிங்' நிறுவனத்தின் செயற்கைகோள் இண்டர்நெட் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இது ஸ்டார்லிங் நிறுவனத்துக்கும் இந்தியாவுக்கும் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் நம் நாட்டுக்கு பூமியில் இருந்து 550 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள ‛ஸ்டார்லிங்' செயற்கைகோள்கள் மூலமாக இண்டர்ர்நெட் சேவை என்பது கிடைக்க உள்ளது. இந்த ‛ஸ்டார்லிங்' செயற்கைகோள் என்பது வழக்கமான Geostationary satellites உடன் ஒப்பிடும்போது முற்றிலும் வித்தியாசமானது. ‛ஸ்டார்லிங்' நிறுவனத்துக்கு இண்டர்நெட் சேவை வழங்குவதற்காக எலான்மஸ்க்கின் ‛ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனம் இதுவரை 7,000 LEO செயற்கோள்களை அனுப்பி சுற்றவைத்துள்ளது.
‛ஸ்டார்லிங்' மூலம் இந்தியாவின் கிராமப்புற பகுதிகளுக்கும் அதிவேக இண்டர்நெட் சேவை கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. எலான் மஸ்க் நிறுவனத்தின் என்ட்ரியை மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்திருந்தார். ‛பூங்கொத்தில் ஒரு புதிய மலர்' என்று ஸ்டார்லிங் வருகையை அவர் குறிப்பிட்டு இருந்தார். அதோடு ஸ்டார்லிங் நிறுவனத்துக்கு விரைவில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடக்கும் என்றும் சொல்லி இருந்தார். இந்த நிலையில் தான் ஸ்டார்லிங் நிறுவனத்துக்கு மத்திய அரசு லைசன்ஸ் வழங்கி உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications