அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்? ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு
டெல்லி: போக்குவரத்து துறை மோசடி வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார். அப்போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தர லஞ்சம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2023 ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.

ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கில், செந்தில்பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. இதையடுத்து செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரம் மற்றும் மது விலக்கு ஆயத்த தீர்வுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
வழக்கில் 472 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், அவரது ஜாமீனை ரத்து செய்ய கோரி வித்யாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு, கடந்த 12 ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, அமைச்சராக தொடர விருப்பமா? என செந்தில் பாலாஜியிடம் கேட்டுத் தெரிவிக்க வேண்டும் என அவர் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 4 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
இதற்கிடையே அமலாக்கத் துறை தலைமையகத்தின் இணை இயக்குநர் ஜவாலின் தேஜ்பால் சார்பில் வக்கீல் அர்விந்த் குமார் சர்ம புதிய மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மனுவில், செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியபோது பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
குறிப்பாக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பதிவு செய்துள்ள ஊழல் வழக்குகளின் அரசு தரப்பு சாட்சிகளையோ, பாதிக்கப்பட்ட நபர்களையோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கொள்ளக்கூடாது. ஊழல் வழக்கிலோ, பண மோசடி வழக்கிலோ இவ்வாறு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கொண்டால் ஜாமீன் ரத்து செய்வதற்கான முகாந்திரமாக கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் அமலாக்கத் துறை தரப்பு முக்கிய சாட்சியான தமிழ்நாடு மாநில தடயவியல் துறை நிபுணர் மணிவண்ணன் வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகி வந்தார். செந்தில் பாலாஜி ஜாமீன் பெற்ற பிறகு அரசு தரப்பு சாட்சிகள் சரியாக சாட்சியம் அளிக்க முன்வருவதில்லை. செப்டம்பர் 26, 30 ஆம் தேதிகளில் நடைபெற்ற விசாரணையின்போது அவர் ஆஜராகவில்லை.
பின்னர் ஆஜரான மணிவண்ணனிடம் செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல்கள் எவ்வித அர்த்தமும் இல்லாமல் குறுக்கு விசாரணை செய்தனர். விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் விசாரணைகளுக்கு முறையாக ஆஜர் ஆவதில்லை. எனவே செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் அமலாக்கதுறை தொடர்ந்துள்ள புதிய மனு, வழக்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications