8 முறை சம்மனை புறக்கணித்த கெஜ்ரிவால்.. ED வைக்கும் செக்! டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் புதிய புகார் மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றம், வரும் 16 ஆம் தேதி கெஜ்ரிவால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட கட்சியான ஆம் ஆத்மி மீது அடுத்தடுத்து ஊழல் புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கை கெஜ்ரிவாலுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.

அதாவது, மதுபான கொள்கையில் உள்ள சில தகவல்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டு அதன் மூலம் ஆதாயம் பெற்றதாக ஆம் ஆத்மி கட்சியினர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த கொள்கையை ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற்றது. புதிய மதுபான கொள்கையில் ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளது, சட்டவிரோதப் பரிவர்த்தனை என நடைபெற்றது என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் எம்.பி உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். இதே வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அமலாக்கத்துறை சம்மனுக்கு இதுவரை ஒருமுறை கூட கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
8 முறை அனுப்பியுள்ள நிலையில், கெஜ்ரிவால் தொடர்ந்து சம்மனை ஏற்று ஆஜராக மறுத்து வருகிறார். தேர்தலுக்கு முன்பாக தன்னை கைது செய்து பிரசாரம் செய்ய விடாமல் தடுக்கும் நோக்கத்தில்தான் அமலாக்கத்துறையை ஏவி விட்டு பாஜக தனக்கு நெருக்கடி கொடுப்பதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வருகிறார்.
கடந்த 4 ஆம் தேதி அமலாக்கத்துறை, கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அன்றைய தினம் ஒரு கடிதம் ஒன்றை கெஜ்ரிவால் அமலாகக்த்துறைக்கு அனுப்பியிருந்தார். அதில், வரும் 12 ஆம் தேதிக்கு மேல் சம்மனுக்கு பதிலளிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். வீடியோ கான்பரன்சிங் மூலம் அமலாக்கத்துறை முன் கெஜ்ரிவால் ஆஜராக தயார் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு மத்தியில் டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை புதிய புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், வரும் 16 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications