நேற்று அமித்ஷா.. இன்று மோடி.. பிரதமரின் தோளில் கைவைத்து பாராட்டிய பீட்டர்சன்.. ஓ காரணம் இதுதானாம்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடியை அடுத்தடுத்து சந்தித்து பேசியது யூகங்களை கிளப்பி உள்ளது.
டெல்லி: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வீரருமான பீட்டர்சன் இந்தியா வந்துள்ளார். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய பீட்டர்சன் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த வேளையில் அவர்கள் இருவரும் கைக்குலுக்கி கொண்ட நிலையில் பிரதமர் மோடியின் தோள் மீது கைவைத்து பீட்டர்சன் உரையாடினார். இதுதொடர்பான போட்டோ தற்போது வெளியாகி உள்ள நிலையில் இந்த சந்திப்பின் பின்னணி பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் கேப்டனாகவும், வீரராக செயல்ட்டு வந்தவர் கெவின் பீட்டர்சன். சிறந்த பேட்ஸ்மென்னாக இவர் இருந்தார். இவரை ரசிகர்கள் அன்போடு கேபி என அழைத்து வந்தனர். கடந்த 2004 முதல் 2014 வரை இங்கிலாந்து அணிக்காக பீட்டர்சன் விளையாடினார். அதன்பிறகு அவர் ஓய்வு பெற்றார்.
இதுவரை கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணிக்காக 104 டெஸ்ட், 136 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடி 13,797 ரன்கள் எடுத்துள்ளார். பல முக்கிய போட்டிகளில் இங்கிலாந்து அணியை வெற்றி பெற வைத்துள்ளார். மேலும் இவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி, பெங்களூர் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.

அமித்ஷாவுடன் சந்திப்பு
இந்நிலையில் தான் இந்தியா வந்த பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவுகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, ‛‛இந்தியா வருவது எனக்கு ஊக்கம் அளிக்கறது. இந்தியாவின் விருந்தோம்பல் எனக்குபிடிக்கும்'' என ட்விட் செய்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர். இந்நிலையில் தான் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பீட்டர்சன் சந்தித்து பேசினார். இதுதொடர்பான போட்டோக்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். அதில் அமித்ஷாவை ஊக்கமளிக்கும் நபர் என குறிப்பிட்டு புகழ்ந்திருந்தார்.

மோடியுடன் இன்று சந்திப்பு
இதன் தொடர்ச்சியாக பீட்டர்சன் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த வேளையில் பிரதமர் நரேந்திர மோடி, பீட்டர்சன் ஆகியோர் கைக்குலுக்கி கொண்டனர். மேலும் சந்திப்பின் தொடக்கத்தில் பீட்டர்சன் பிரதமர் மோடியின் தோள் மீது கைவைத்து நட்பு பாராட்டினார். இதுதொடர்பான போட்டோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது.

மோடிக்கு நன்றி சொன்ன பீட்டர்சன்
மேலும் பீட்டர்சன்னும் அந்த போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், ‛‛உங்கள் பிறந்தநாளில் சிறுத்தைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தது பற்றி பேசுவதில் பெருமை அடைகிறேன் சார். உங்களின் புன்முறுவல் புன்னகைக்கும், கைக்குலுக்கியதற்கும் நன்றி. உங்களை மீண்டும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என தெரிவித்து இருந்தார்.

காரணம் என்ன?
இந்நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் பீட்டர்சன் சந்தித்தன் பின்னணியில் உள்ள காரணம் வெளியாகி உள்ளது. அதன்படி அமித்ஷாவை பீட்டர்சன் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். மாறாக தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 12 சிறுத்தைகள் கொண்டு வந்து மத்திய பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்டுள்ளது. வனவிலங்குகளை பாதுகாப்பு சந்ததிகளை பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் முயற்சியை பாராட்டும் நோக்கத்தில் பீட்டர்சன் பிரதமர் மோடியை சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது. ஏனென்றால் பீட்டர்சன்னும் வனவிலங்கு பாதுகாப்பில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதும், காண்டாமிருகம் உள்பட பல வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு நடவடிக்கைகளில் அவர் தன்னை ஈடுபடுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications